திருமலை: அமைச்சராக பொறுப்பேற்ற நடிகை ரோஜா கூறுகையில், இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என கூறினார். ஆந்திர மாநில அமைச்சராக நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நேற்று பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா, என்டிஆர் போன்றவர்களின் உத்வேகத்தின் மூலம் அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் திரைப்பட துறையில் இருந்து அரசியலுக்கு வந்தேன். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது சந்திரபாபு வெற்றிக்காக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் உயிரை பணயம் வைத்து பிரசாரம் மேற்கொண்டேன். ஆனால் அவை எதையுமே அவர் கருத்தில் கொள்ளாமல், என்னை எப்படி அரசியலை விட்டு ஒழிக்க வேண்டும் என செயல்பட்டு வந்தார். அதன்பிறகு ஜெகன்மோகன் எனக்கு வழங்கிய வாய்ப்பின் மூலம், நகரி தொகுதியில் போட்டியிட்டு 2முறை வெற்றி பெற்றேன். இரண்டு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்ற நிலையில், ஜெகன்மோகன் அமைச்சரவையில் தற்போது எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.எம்எல்ஏவாக இருந்தாலும் தொடர்ந்து எனது குடும்ப வருவாய்க்காகவும், ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரைப்படங்களில் நடித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தி வந்தேன். தற்போது அமைச்சராக ஜெகன்மோகன் எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதால், பொறுப்புகள் எனக்கு அதிகரித்துள்ளது. எனவே திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இனி நடிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.