எக்ஸ்இ கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை- மத்திய சுகாதார மந்திரி ஆலோசனை

இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் காஜியாபாத்தில் உள்ள மூன்று பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
காஜியாபாத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதேபோல் நொய்டாவில் உள்ள பள்ளியில் மூன்று ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவை புதிய வகை கொரோனாவான எக்ஸ்இ வகையை சேர்ந்ததா என்பது குறித்து இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை.
அந்த பள்ளிகளில் மேலும் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வர்கள் என காசியாபாத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பவ்தோஷ் ஷங்தர் தெரிவித்துள்ளார்.  
இந்நிலையில் அந்த பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, டெல்லியில் இன்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும்  நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். 
மாறுபட்ட எக்ஸ்இ வகை கொரோனா நிலவரம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.  கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது செயல்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் மேற்கொள்வது மற்றும் தகுதியுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.