பாஜக ஆட்சிமன்றக் குழுவில் இடம்பெறுவதற்காகவே, பிரதமர் நரேந்திர மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவில் அதிக அதிகாரம் படைத்த அமைப்பாக கருதப்படுவது அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுவாகும். 11 பேர் அங்கம் வகிக்கும் இக்குழுவில் தற்போது 4 இடங்கள் காலியாகவுள்ளன. இதையடுத்து, இந்தக் குழுவில் இடம்பெறுவதற்கு அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதனால் பாஜக தலைவர்கள் பலர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்ற இரண்டு வாரங்களுக்குள்ளாகவே பிரதமரை யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில், பாஜகவின் ஆட்சிமன்றக் குழுவில் இடம்பெறும் முயற்சியின் ஒருபகுதியாகவே, இந்த சந்திப்பு நடைபெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சிமன்றக் குழுவில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன. தற்போதைய பாஜக ஆட்சிமன்றக் குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பாஜக பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM