சென்னை ஐஐடி-யின் பி.எஸ்சி (இளங்கலை அறிவியல்) பட்டப் படிப்பு கல்வித் தடைகளைக் கடந்து, தமிழகத்தில் தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டிலேயே இம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்குச் சமமான வாய்ப்பை உருவாக்கும் வகையில், கல்விக்கான தடைகளை நீக்கி தரமான சென்னை ஐஐடி-யின் கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
சென்னை, கோயம்புத்தூர் போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தொடங்கி, சிறு நகரங்கள், கிராமங்கள் வரை பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களும், வெவ்வேறு வயது உடையவர்களும், மாறுபட்ட சமூகப் பொருளாதார பின்னணியைக் கொண்டவர்களும் இந்தப் பட்டப் படிப்பைப் படித்துவரும் மாணவர்களாக உள்ளனர்.
சமூகப் பொருளதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆதரவை நல்கும் வகையில், கல்வி உதவித் தொகை மற்றும் கட்டணச் சலுகை ஆகியவற்றை சென்னை ஐஐடி வழங்கி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,500-க்கும் அதிகமான மாணவர்களில், 180க்கும் மேற்பட்டோர் 100 சதவிகித கல்வி உதவித் தொகையும், 120க்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் 50 சதவிகித கட்டணச் சலுகையும் பெறுகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் தாக்கம் குறித்து விளக்குவதற்காக, ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “நாடு முழுவதும் கற்போருக்கு ஐஐடி-யின் தரமான கல்வியைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சென்னை ஐஐடி இந்தத் தனித்துவமான பி.எஸ்.சி. பட்டப்படிப்பைத் தொடங்கியது. தரவு அறிவியல் என்பது தற்போது வளர்ந்துவரும் துறையாகும். நிறுவனங்களைப் பொருத்தவரை திறன்மிக்கவர்களுக்கான தேவை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. உயர்தரமான கல்வியை வழங்குவதில் சென்னை ஐஐடி நெடிய வரலாற்றைக் கொண்டதாகும். ஐஐடி அனைவராலும் அணுகக் கூடியது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டார்.
மிகப்பெரிய அளவில் போட்டியிருக்கக் கூடிய ஜே.இ.இ. தேர்வு எழுதாமலேயே சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் கல்வி பயில்வதை இத்திட்டம் முதன்முறையாகச் சாத்தியமாக்கி உள்ளது. ஜே.இ.இ. பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க முடியாமல் தவிக்கும் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு இது நேரடியாகப் பயன் அளிக்கிறது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணப் பிரியா என்ற மாணவி கணினி அறிவியலில் எந்தப் பின்புலமும் இல்லாத நிலையிலும், தற்போது சென்னை ஐஐடி-யின் பி.எஸ்சி பாடத்திட்டத்தில் தொடக்க நிலையில் பயின்று வருகிறார். “டேட்டா சயின்ஸ், புரோகிராமிங் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள விரும்பினேன். இத்திட்டம் குறித்துக் கேள்விப்பட்டதும், ஆன்லைனில் அதுபற்றிப் படித்தேன். கட்டணத்தை செலுத்த இயலாத நிலையில், ஆரம்பத்தில் நான் இதில் சேர முடியவில்லை. குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்காக சென்னை ஐ.ஐ.டி. உதவித்தொகை வழங்கி வருவதால், இப்பாடத் திட்டத்தில் சேர்ந்து படிப்பைத் தொடரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. எனது கனவை நனவாக்க உதவியதற்காக உள்ளபடியே சென்னை ஐஐடி-க்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இத்திட்டம் பற்றிக் கூறுகிறார் சரவணப்பிரியா.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பை முடித்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், தற்போது இந்த பட்டப்படிப்புத் திட்டத்தில் இங்கு பயின்று வருகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஜனவரி 2022-ல் சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி சந்தித்தபோது, இந்தத் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வழிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் இலக்கை அடைவதற்காக, சென்னை ஐஐடி-யின் பி.எஸ்சி பட்டப்படிப்பு ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளைத் தகுதிப்படுத்தும் விதமாக இலவசப் பயிற்சியை வழங்குவார்கள். முதல்கட்டமாக சென்னையில் உள்ள ஏறத்தாழ 35 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைச் சந்தித்து, ஜூலை மாதம் முதல் பயிற்சியைத் தொடங்க இதற்கான ஆசிரியர்கள் திட்டமிட்டு உள்ளனர். மொழியைப் புரிந்துகொள்வதில் எந்தவித தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக, காணொளி விரிவுரைகளின் தமிழ் மொழியாக்கங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவற்றைப் பெறும் வகையில் இந்தப் பாடத்திட்டம் கவனமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேல்நிலைக் கல்வி படிப்பவர்கள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்துகொண்டு, பின்னர் வெற்றிகரமாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபின் இதில் சேரலாம்.
விரிவான நேரடிப் பயிற்சி மற்றும் அனுபவக் கற்றல் மூலம், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கு மாணவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்படுவார்கள். பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு ஆகியவற்றை முடித்தவர்களுக்கு நிறுவனங்களில் உள்ளிருப்புப் பயிற்சி அல்லது வேலைவாய்ப்பு கிடைக்க ஏதுவாக சென்னை ஐஐடி உதவுகிறது.
தரவு சார்ந்த உலகில் திறமையான வேலைவாய்ப்புள்ள நிபுணர்களை உருவாக்குவதற்கான தளமாக சென்னை ஐஐடி-யின் பி.எஸ்.சி திட்டம் திகழும். இந்த உள்ளடக்கிய மற்றும் வாய்ப்பு அளிக்கும் கல்வி முறை ஐஐடி-யின் முயற்சியை மிகப் பெரிய அளவில் நீட்டிக்கச் செய்யும் என சென்னை ஐஐடி குழுவினர் நம்புகின்றனர். உயர் தரமான கல்வியைப் பெறுவதில் கற்போருக்கு உள்ள அவசரத் தேவையையும் இந்த கல்விமுறை நிவர்த்தி செய்யும்.