இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் கூடிய அமைதியான உறவையே பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
அந்த வாழ்த்துச் செய்தயில், பயங்கரவாதம் அல்லாத ஸ்திரத்தன்மை நிலவும் பிராந்தியத்தை இந்தியா விரும்புவதாகவும், அந்த சூழல் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இரு நாட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நம்மால் கவனம் செலுத்த முடியும் எனவும் மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில், மோடியின் வாழ்த்துச் செய்திக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு வாழ்த்து கூறியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் கூடிய அமைதியான உறவையே பாகிஸ்தான் விரும்புகிறது. அதே வேளையில், முக்கியப் பிரச்னையாக இருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் சுமூகத் தீர்வை எட்ட வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் செய்துள்ள தியாகங்களை அனைவரும் அறிவர். எனவே, நமது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தி, மக்களின் சமூக – பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம் என அந்தப் பதிவில் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமராக பொறுப்பேற்றவுடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஷெபாஸ் ஷெரீப், “காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணாமல் இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை பேணுவது கடினம்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM