முஸ்லீம்களும் இந்துக்களும் ஒரு தாய் மக்கள். இந்துக்களைப் போல முஸ்லீம்களும் நிம்மதியாக, சுதந்திரமாக, அமைதியாக வாழ வேண்டும்.
பிரிவினை அரசியல்
நடத்தக் கூடாது என்று மூத்த அரசியல் தலைவர்
எதியூரப்பா
கோரியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரே இப்படி பாஜக பிரிவினை அரசியல் செய்வதாக கூறியிருப்பது பாஜகவினரை அதிர வைத்துள்ளது. அவர் மட்டுமல்லாமல், முஸ்லீம்களுக்கு எதிரான பிரிவினை அரசியல் தவறு என்று கர்நாடக அமைச்சர் மதுசாமியும் கூறியுள்ளார். இதுவும் பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
சமீப காலமாக கர்நாடகத்தில் மத ரீதியிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. முஸ்லீம்களைக் குறி வைத்து பாஜகவினரும், இந்துத்வா அமைப்பினரும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. பின்னர்
முஸ்லீம்கள்
, இந்துக் கோவில்களுக்கு அருகே கடை நடத்த தடை விதிக்கப்பட்டது. அடுத்து ஹலால் உணவு சாப்பிட தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படி தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வந்தால், பெங்களூரின் பெயரும், கர்நாடகத்தின் பெயரும் பெருமளவில் கெட்டுப் போய் விடும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர். பிரபல பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜூம்தாரும் இதுகுறித்து எச்சரித்து டிவீட் போட்டார். முதல்வர் எஸ்.ஆர். பொம்மை இதில் தலையிடவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் தார்வாட் நகரில் முஸ்லீம் பழ வியாபாரியை சங் பரிவார் கும்பல் தாக்கி பழக்கடையை சேதப்படுத்திய செயல் அனைவரையும் வேதனைப்பட வைத்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத இடத்திலிருந்து பாஜகவைக் கண்டித்து குரல் வந்துள்ளது. அது முன்னாள் முதல்வர் எதியூரப்பாதான். இவர்தான் தென்னிந்தியாவின் முதல் பாஜக முதல்வர் ஆவார். இவரால்தான் கர்நாடகத்தில் பாஜக இந்த அளவுக்கு வலுவாகவும் வளர்ந்தது. இவருக்குப் பதில்தான் எஸ்.ஆர். பொம்மை முதல்வர் பதவியில் அமர்ந்தார். இந்த நிலையில் பாஜக செய்வது தவறு என்ற ரீதியில் பேசியுள்ளார் எதியூரப்பா.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். நான் அவருக்குக் கூறிக் கொள்வதெல்லாம், இந்த பிரிவினை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து சமூகத்தினரும் மரியாதையுடனும், அமைதியுடனும் வாழ வழி செய்ய வேண்டும். அவரவர் வேலையில் அவரவர் கவனம் செலுத்த வேண்டும்.
இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரு தாய் வயிற்று மக்கள். சகோதரர்கள். சில விஷமிகள் இவர்களைப் பிரிக்க முயல்கின்றனர். இப்படி ஏதாவது நடந்தால் அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உண்டு. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டும். அதை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் அமைதியாக வாழ வேண்டும். அது முக்கியம் என்று கூறினார் எதியூரப்பா.
இதற்கிடையே, எஸ்.ஆர்.பொம்மை அரசின் மூத்த அமைச்சரான ஜே.சி. மதுசாமியும் பிரிவினை அரசியலைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் அமைதியைக் கெடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது.
இதுபோன்ற ஆட்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. இந்து அமைப்புகள் தங்களது எல்லையை மீறி நடந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. தேசப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவில் இருந்த, இருக்கிற அனைவருமே இந்தியர்கள்தான். மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த யாரும் முயலக் கூடாது. அரசு அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்காது.
அனைவரும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ அரசியல் சாசனம் உறுதி செய்கிறது. அனைவரும் இந்த நாட்டு மக்களாக அனைத்து உரிமைகளும் உள்ளது. அரசியல் சாசனப்படி யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலும் செய்ய உரிமை உண்டு. யார் வேண்டுமானாலும் எந்தக் கடவுளையும் வணங்கலாம். யாரும் யாருடைய மதத்தையும் இழிவுபடுத்த உரிமை இல்லை.
ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அந்த ஆட்சி நடக்கும் மாநிலத்தில் குறிப்பிட்ட மதப் பிரிவினருக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டால் அது அந்தக் கட்சிக்கும், ஆட்சிக்கும் பெருமை சேர்க்காது. அதை யாரும் ஏற்க மாட்டார்கள். நான் நிச்சயம் ஏற்க மாட்டேன் என்றார் மதுசாமி.
கர்நாடக பாஜக அரசு முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக விரைந்து செயல்பட வேண்டும், மெத்தனமாக இருக்கக் கூடாது, வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதையே எதியூரப்பா, மதுசாமி ஆகியோரின் கருத்துக்கள் உணர்த்துவதாக கருதப்படுகிறது.