சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது :
ஆதிக்க சக்திகள் திணித்த தீண்டாமை எந்த வடிவத்திலும் சமூகத்தில் இருக்கக் கூடாது, அதைத்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டக்கூறு 17 சொல்கிறது. அதனை உறுதிசெய்வதுதான் மக்களுக்காகப் பணியாற்றும் நம்முடைய தலையாய கடமையாக அமைந்திருக்கிறது.
வன்கொடுமையைத் தடுக்க நாம் எத்தனையோ முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கவே செய்கிறது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இனி பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாயும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணையும் போடப்பட்டுவிட்டது.
இது தொடர்பான வழக்குகளில் 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடத்தப்படும் சட்டம் – ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது உள்ள சிறப்பு நீதிமன்றங்களுடன் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சில கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள்
பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நல்லிணக்கத்தினை மேம்படுத்தும் விதமாக, அனைத்து சமூகத்தினரும் பயன்பெறத்தக்க வகையில் முன்மாதிரியாக 10 எரிவாயு தகனமேடைகள், 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் கூடுதல்வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் கீழ் 123 கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்விச் சூழல், உணவுத்தரம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க, ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
சென்னை, நந்தனத்தில் எம்.சி.ராஜா பெயரால் செயல்பட்டு வரும் மாணவர் விடுதியை மிகப் பிரமாண்டமானதாக கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. விடுதி வளாகத்திற்குள்ளேயே தற்போது காலியாக உள்ள இடத்தில் சுமார் 75,000 சதுர
அடிபரப்பளவில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி
40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் வேண்டுகோளை ஏற்று
ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் நடைபெறும் சமபந்தி போஜனம் இனிமேல் சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.