ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 13 மற்றும் 14-ல் இலங்கையின் புத்தாண்டு தினம் விமர்சையாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. எனவே அரிசி, வெங்காயம், தக்காளி, எரிபொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்து மக்கள் உணவு பற்றாக் குறையால் தவித்து வருகின்றனர். மேலும் அங்கு அந்நிய நாடுகளை உள்ளடக்கிய இறக்குமதியும் ஏற்றுமதியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க அண்டைநாடுகள் உதவ வரவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதையடுத்து கடந்த வாரம் இந்தியாவின் பல்முனை ஆதரவின் கீழ் (multi-pronged support) 16,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு வழங்கப்பட்டது. தற்போது இலங்கையின் புத்தாண்டு தினத்தையொட்டியும் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டும் மேலும் 11,000 மெட்ரிக் டன் அரிசியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது இந்தியா.
இதை உறுதிப்படுத்தியுள்ள இந்திய உயர் ஆணையம் (Indian High Commission), இலங்கை மக்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்தியாவில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட அரிசி கொழும்பு சென்றடைந்தது என்று கூறியுள்ளது. மேலும் இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையான பிணைப்பை எடுத்துக்காட்டுவதாகவும், இன்னும் இது தொடரும் என்றும் கூறியுள்ளது இந்திய உயர் ஆணையம்.