சென்னை: சென்னையில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உளளது.
தமிழ்நாட்டில் இந்த மாதம் முதல் சொத்துவரியை உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. குறைந்த பட்சம் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகைகளில் வெளியான அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் தற்போது உள்ள அடிப்படை தெருக் கட்டணமானது 6 சதவீதம் அல்லது 5 ஆண்டு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம், இவற்றில் எது அதிகமாக உள்ளதோ அதன் அடிப்படையில் உயர்த்தப் படும். இவ்வாறு உயர்வு செய்யப்படும் அனைத்தும் தற்போது மற்றும் புதிய மதிப்பீடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த அறிவிப்பு தொடர்பான ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை / 600003 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தெருக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டே சொத்து வரியை சென்னை மாநகராட்சி நிர்ணயித்து வரும் நிலையில், ஒவ்வோர் ஆண்டும் தெருக் கட்டணம் உயர்த்தப்பட்டால், சொத்து வரியும் தாமாக உயரும் என்பது கவனிக்கத்தக்கது.