கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் முனியப்பனூரைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.விக்னேஷ். இவர், பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில், விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பு ஆள்களையும், தவறாகச் சித்தரித்துப் பதிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையறிந்த, கரூர் மாவட்ட தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி தீபக் சூரியன் என்பவர் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இன்று காலை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற அந்த இளைஞரைக் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கரூர் நீதிமன்ற நீதிபதி, அந்த இளைஞரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் குறித்து தவறாக சித்தரித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.