சென்னை சைதாப்பேட்டையில் 7,200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய மானியக் கோரிக்கையில், பொதுப்பணிகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில், சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 190 சி வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.7,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் எனவும், தமிழகம் முழுவதும் 17 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு செய்து புனரமைக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மேலும், பொதுப்பணித் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 308 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், திறன் மேம்பாடு மற்றும் தரக்கட்டுப்பாட்டுக்காக பொறியியல் மற்றும் ஆய்வக உபகரணங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ரூ. 17.42 கோடி மதிப்பில், திருவண்ணாமலை மற்றும் வேலூரில் புதிய கூடுதல் சுற்றுலா மாளிகைகளும், வாணியம்பாடியில் ஒரு ஆய்வு மாளிகையும் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.