சென்னை: அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது என சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலளாராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2016-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவையும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனையும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
இது தொடர்பான வழக்கில், ”அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும்” என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்றுள்ள நிலையில், ‘இந்த தீர்ப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்’ என சசிகலா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது என தற்போது சசிகலா தெரிவித்துள்ளார். சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். அதற்கிடையில் அரசியல் ரீதியாக எப்படி வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கு நெருக்கடி எதுவும் இல்லை. தீர்ப்பு அதிமுக தரப்பில் கொண்டாட்டங்கள் இருந்தாக பேசப்படுகிறது. ஆனால், நான் அங்கு பார்த்ததே வேறு. கொங்கு மண்டலத்தில் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், டிடிவி தினகரன் மீதான அமலாக்கத்துறை வழக்கை சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் இருந்து ஏதுனும் அழுத்தங்கள் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எங்களை பொறுத்தவரைக்கும் 1996லேயே இருந்தே இது போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறோம். இதனால் இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல” என்றார். அதிமுக இடத்தை பாஜக பிடிக்க முயல்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சசிகலா, “அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நிறைய கட்சிகள் தங்கள் கட்சியை முதன்மைப்படுத்த நினைக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. எங்களை பொறுத்தவரைக்கும் அதிமுக ஒருங்கிணைத்து வெற்றிபெற வைக்க வேண்டும். அதை செய்து முடிப்பேன்.
தொடர்ந்து பயணம் செய்துகொண்டு தான் உள்ளேன். ஆன்மிக பயணம் என்ற முறையில் சென்றால் கூட, அரசியல் நிர்வாகிகள் என்னுடன் வருகிறார்கள். எனவே அரசியல் பயணத்தையும் அப்படியே தொடங்க போகிறேன். அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.