ஓமிக்ரானின் துணை மாதிரியான பிஏ.2 கரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவிய கரோனா வைரஸ் வகைகளில் 85.9 சதவிகிதமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க தேசிய பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஓமிக்ரான் வைரஸின் துணை மாதிரியான பிஏ.2 வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், இது அமெரிக்காவில் அடுத்த கரோனா பாதிப்பு அலைகளை ஏற்படுத்தும் என்பதை நம்பவில்லை என அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளான நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் மாசசூசெட்ஸ் ஆகியவற்றில் கரோனாவின் புதிய துணை மாதிரியான பிஏ.2 வைரஸ் அதிகமாக பாதித்து வருகிறது.
கடந்த சிலநாள்களில் மட்டும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் பென்சில்வேனியாவின் வடகிழக்கு மாநிலமான பிலடெல்பியாவில் அதிகரித்து வரும் புதியவகை கரோனா வைரஸ் பாதிப்பினால் ஏப்ரல் 18 முதல் பொதுஇடங்கள் மற்றும் பிற தனிப்பட்ட இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 70 சதவிகித கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் மதிப்பீட்டின்படி, ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் BA.2 நாட்டில் 75.4 சதவீத மாறுபாடுகளை உருவாக்கியுள்ளது. இது முந்தைய மதிப்பீட்டில் 72.2 சதவீதமாக இருந்தது.
மேலும் இந்த வாரத்தில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ள கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சராசரி ஏப்ரல் 9 நிலவரப்படி 28,339 என இருந்தது குறிப்பிடத்தக்கது.