பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் CITIIS திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை மேயர் திருமதி ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த CITIIS (City Investments To Innovate, Integrate and Sustain) திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
CITIIS திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கட்டட உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பிக்கும் திறனை மேம்படுத்துல், மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்துதல், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் போன்ற 6 முக்கிய காரணிகளை கொண்டு முழுவதுமாக நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் 28 பள்ளிகள் முழுமையாக நவீன வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதன்படி, இந்தப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு கட்டமைப்புகள், கழிவறைகள், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள், சிறப்பு விளையாட்டு பயிற்சிகள், ஸ்டெம் ஆய்வகங்கள் மற்றும் மொழி சார்ந்த ஆய்வகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.
CITIIS திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் இராயபுரம் மண்டலம், வார்டு-51, சிமெண்ட்ரி சாலை, மணிகண்டன் தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மேயர் திருமதி ஆர்.பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்தப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, அடையாறு மண்டலம், வார்டு-179, காந்தி கிராமம், லட்சுமிபுரம் சென்னை நடுநிலைப்பள்ளியில் CITIIS திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அப்பள்ளியின் வகுப்பறைகளை பார்வையிட்டு மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர், வார்டு-180, திருவான்மியூர், பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது, துணை ஆணையாளர்கள் திருமதி டி.சினேகா, இ.ஆ.ப., (கல்வி), திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), திரு.சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்), மண்டல அலுவலர் திரு.திருமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.