புதுடெல்லி: ஒன்றிய அரசானது பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக பொதுமக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதிர் குமார் ஜெயின். இவர் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக வீட்டை பெற்றுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில், ‘நான் பல்வேறு வாடகை வீடுகளில் வசித்தேன். பலமுறை வீட்டை மாற்றியுள்ளேன். அது மிகவும் வலி நிறைந்தது. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு ஒரு வரப்பிரசாத’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பிரதமர் மோடி எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘அரசு திட்டத்தின் கீழ் வீடு பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சிமென்ட் ஆகியவற்றால் கட்டப்பட்ட கட்டிடம் கிடையாது. நமது உணர்வுகள், ஆசைகள் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. வீட்டின் எல்லைச் சுவர்கள் நமக்கு பாதுகாப்பை வழங்குவது மட்டும் இல்லாமல் நாளை என்பதற்கான நம்பிக்கையை ஊட்டுவதாகவும் உள்ளன. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உங்கள் சொந்த வீடு என்ற கனவு நனவாகி உள்ளது. இந்த வீடு உங்கள் குடும்பத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கும், உங்கள் இரு குழந்தைகளுக்கும் சிறந்த எதிர்காலத்துக்கும் ஒரு புதிய அடித்தளம் போன்றது. பொதுமக்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை கொண்டு வருவதற்காக அரசு முயற்சிக்கிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது,’ என்று குறிப்பிட்டுள்ளார்.