புது டில்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முன்மொழிந்துள்ள அடிப்படை விலைகள் மிக அதிகம் எனவும் மறுபரிசீலனை செய்யுமாறும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது 4ஜி இணைய சேவை வசதி கிடைக்கிறது. அதன் அடுத்த நிலையான 5ஜி சேவையை பல்வேறு நிறுவனங்கள் சோதித்து வருகின்றன. 4ஜியை காட்டிலும் 20 மடங்கு அதிவேக இணைப்பை 5ஜி மூலம் பெறலாம். இதன் மூலம் கல்வி, மருத்துவம், ஐ.டி., வங்கி, பொழுதுபோக்கு என பல துறைகளும் புதிய பாய்ச்சலை பெறும். இந்தாண்டு இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடக்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தனர்.
அதற்கான பணிகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியப் பங்கேற்பாளர்களாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாகவும் உள்ளன.

தற்போது அச்சங்கம் 5ஜி ஏலத்திற்கான அடிப்படை விலையை குறைக்க கோரியுள்ளது. ஏற்கனவே டிராய் 5ஜி நெட்வொர்குகளுக்கான பல்வேறு அலைக்கற்றைகளின் விலைகளை 35 முதல் 40 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.
இருப்பினும் 90 சதவீதம் குறைக்கும் படி கேட்கின்றனர். மேலும் நிறுவனங்களுக்கு நேரடியாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதையும் விமர்சித்துள்ளது. நேரடி ஒதுக்கீடு பெரிய நிறுவனங்கள் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதை தடுக்கும் என கூறியுள்ளது.
Advertisement