புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த ஞாயிறுன்று ராம நவமி கொண்டாடப்பட்டது. அப்போது, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ராமநவமி விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், வளாகத்தில் உள்ள காவேரி விடுதியில் அசைவ உணவு வழங்கப்பட்டதை இவர்கள் தட்டிக்கேட்டனர். இதனால், மாணவர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில், 6 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். மேலும் வளாகத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகமும் எச்சரித்தது. இந்நிலையில், மாணவர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்யும்படி, இந்த பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு ஒன்றிய கல்வி துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.