இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் விலகினார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ( என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.
பாக். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்தியா -பாக். இடையே அமைதியான நல்லுறவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அடுத்த மாதம் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கியுள்ளார். அடுத்த மாதம் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப நவாஸ் திட்டமிட்டுள்ளதாகவும், அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.