புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.7000 கோடி மோசடி செய்த வழக்கில் அவரது வைர நகை கடையின் முக்கிய அதிகாரியான சுபாஷ் சங்கர் பராப் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார். வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன்பெற்று மோசடி செய்தார். ரூ.13 ஆயிரத்து 578 கோடி அளவுக்கு அவர் கடன் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து நீரவ் மோடி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் வெளிநாடு தப்பி சென்றனர். நீரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.7000 கோடி கடன் பெற்ற வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் சுபாஷ் சங்கர் பராப். நீரவ் மோடியின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முக்கிய அதிகாரியான இவர், எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோவில் பதுங்கி இருந்தார். சிபிஐ அதிகாரிகள் குழு அங்கு சென்று அவரை கைது செய்தது. அங்கு சட்டப் போராட்டம் நடத்தி, அவரை இந்தியாவுக்கு அழைத்து செல்ல அனுமதி பெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று அவர் அங்கிருந்து இந்தியா அழைப்பு வரப்பட்டார். அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீரவ் மோடியின் பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தின் நிதிப்பிரிவின் துணை பொது மேலாளராக இருந்த சுபாஷ், ரூ.7000 கோடி கடன் பெறுவதற்காக சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.