மீண்டும் ஜெட் ஏர்வேஸ் பறக்க இருக்கிறது. வரும் அக்டோபரில் ஜெட் ஏர்வேஸ் செயல்படத்தொடங்கும் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் மாத இறுதியில் விமான நிறுவனம் செயல்படுவதற்கு தேவையான அனுமதி கிடைத்துவிடும். இந்த அனுமதிகான இறுதிகட்டத்தில் இருக்கிறோம். அனுமதி கிடைத்த பிறகு அக்டோபர் மாதத்தில் இருந்து செயல்படத் தயாராகி வருகிறோம் என தெரிவித்திருக்கிறார்.
இவர் கடந்த வாரம்தான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
தற்போது நிறுவனத்தில் 200 பணியாளர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரு பங்கு பணியாளர்கள் ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். புதிதாக ஒருவரை வேலைக்கு எடுக்க வேண்டும் என திட்டமிடும்பட்சத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்கள் தயாராக இருந்தால் அவரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறோம்.
அதே சமயத்தில் அனைத்து முன்னாள் பணியாளர்களுக்கும் வேலை கொடுக்க முடியாது. தவிர தற்போது வேலைக்கு சேருபவர்கள் புதிய விதிகளின் படியே எடுத்துக்கொள்ளப்படுவார்கள். ஜெட் 1.0 என்பது கிடையாது. இனி ஜெட் 2.0 மட்டுமே என சஞ்சீவ் கபூர் தெரிவித்திருக்கிறார்.
ஜெட் ஏர்வேஸ் எகானமி மற்றும் பிஸினஸ் கிளாஸ் என இரு வகையான வாய்ப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இதுவரை எந்த வகையான விமானம் என்பதை முடிவு செய்யவில்லை. போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரு நிறுவனங்களிடமும் பேசி வருகிறோம். அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்த பிறகு இறுதி முடிவெடுப்போம். தவிர ஆரம்பகட்டத்தில் வாடகைக்கு விமானங்களை எடுத்துக்கொள்வோம் என சஞ்சீவ் கபூர் தெரிவித்தார்.
விதிகளின் படி உள்நாட்டில் மட்டுமே செயல்பட முடியும். விமானங்களின் எண்ணிக்கை 20க்கும் மேல் இருந்தால்தான் வெளிநாட்டு சேவை குறித்து விமான நிறுவனங்கள் திட்டமிட முடியும்.
2019-ல் மூடப்பட்டது
கடன் பிரச்னை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2019-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து என்.சி.எல்.டி. வெளிநாட்டு வாழ் இந்தியர்களான ஜலான் மற்றும் லண்டனை சேர்ந்த கல்ராக் கேபிடல் ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. இந்த குழுமம் 1350 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறது. இதில் சுமார் ரூ.450 கோடி வரை பழைய கடன்களுக்கு செல்லும். (ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 95 சதவீத கடன்கள் குறைத்துக்கொள்ளப்பட்டன) மீதமுள்ள தொகை நிறுவனத்தை மீண்டும் புதிதாக தொடங்கி நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விபுலா குணதிலகா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இணைந்தார்.
திவாலான நிறுவனம் மீண்டும் செயல்பாட்டினை தொடங்குவது வரவேற்க தகுந்த விஷயமாக இருந்தாலும், விமான எரிபொருள் உச்சத்தில் இருக்கும்போது மீண்டும் வெற்றியடைவது சவாலானதாகவே இருக்கும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM