திருச்சி திருவெறும்பூர் அருகே இன்ஸ்டாகிராமில் 16 வயது சிறுமியை காதலில் வீழ்த்தி, ஓட்டல் அறையில் வைத்து அவருக்கு தாலிக்கட்டி வாழ்க்கையை சீரழித்த புகாரில் பிளாக்மெயில் மாணவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மகளை காப்பாற்ற சென்ற தாய்க்கு குறிவைத்த தற்குறி சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு ஓட்டல் மேனேஜ் மெண்ட் படித்து வந்த கோகுல் என்ற மாணவருடன்கடந்த 2019 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 5 ந்தேதி கோகுல், தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண், பார்த்து ஏற்பாடு செய்திருப்பதாக மாணவியிடம் போன்மூலம் கூறியுள்ளான்.
மேலும் தான் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும், தன்னை வந்து சந்திக்கும்படி மாணவியிடம் கூறி உள்ளான். அதனை நம்பி ஜனவரி 6ஆம் தேதி அந்த மாணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலனைத் தேடி அவன் தங்கிருந்த ஓட்டல் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து கோகுல் தான் வைத்திருந்த தாலியை எடுத்து மாணவியின் கழுத்தில் கட்டி உள்ளான். இனி நாம் இருவரும் கணவன் மனைவி எனக்கூறி அந்த மாணவியிடம் அங்கேயே அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.
இருவரும் தனிமையில் இருந்ததை கோகுல் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. அந்த மாணவியிடம் விரைவில் ஊரரிய திருமணம் செய்து கொள்வதாக கூறி நினைத்த நேரமெல்லாம் மாணவியை ஓட்டலுக்கு அழைத்து தனது அத்துமீறலை தொடர்ந்துள்ளான்.
மாணவியோ தான் கோகுலை காதலிப்பதாக தாயிடம் கூறியதால், கோகுல் குறித்து விசாரித்துள்ளார். அதில் கோகுல் வேலூர் மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் மகன்என்பது தெரியவந்தது. காதல் ஜோடிகளை அழைத்து மாணவியின் தாய் எச்சரித்துள்ளார். இதனால் மாணவி அவனை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.
சில நாட்கள் கழித்து மாணவியின் தாய்க்கு, போன் செய்த கோகுல், தனக்கு உடனடியாக 10,000 ரூபாய் பணம் வேண்டும் என்றும் பணம் தரவில்லை என்றால் உங்கள் மகளுடன்தான், நெருக்கமாக இருக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோக்களை இணையத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
மாணவியின் தாய், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மறுத்துள்ளார். இதையடுத்து பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை தான் அழைக்கும் இடத்துக்கு நீ வந்து செல்… என்று தவறான நோக்கத்தில் அழைத்துள்ளான், இல்லையேல் உனது மகளின் படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மாணவியின் தாயை பிளாக்மெயில் செய்துள்ளான் கோகுல்..!
இதனால் செய்வதறியாது தவித்த மாணவியின் தாய் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கோகுலை கைது செய்தனர். அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்த , மாணவியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அழிக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம், முக நூலில் காதலில் விழுந்தால் இருப்பதை இழந்து சமூகத்தில் இழிவு வந்து சேரும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!