#லைவ் அப்டேட்ஸ்: இலக்குகள் நிறைவேறும் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் – புதின்

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
ஏப்ரல் 13 – 03.30 A.M
ரஷியா ‘இனப்படுகொலை’ செய்கிறது –  ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பை “இனப்படுகொலை” என்று குறிப்பிட்டார்.
அயோவாவில் நடந்த போரின் காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையை நிலைநிறுத்த தனது நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி ஒரு நிகழ்வில் பேசிய பைடன், உக்ரைனிய குடிமக்களுக்கு எதிராக ரஷியா அட்டூழியங்களை நடத்துவதைக் கண்ட மோதலை “இனப்படுகொலை” என்று குறிப்பிட்டார்.
ஏப்ரல் 13 – 03.00 A.M
உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷியா சிறை வைத்துள்ளது என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷிய அரசு சிறைகளில் அடைத்து உள்ளது என தெரிவித்தார்.
ஏப்ரல் 13 – 02.00 A.M
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற அதிபர் புதின் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று. எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

ஏப்ரல் 13 – 01.00 A.M

உக்ரைனில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது
ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) மரியுபோலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்திய உறுதிப்படுத்தப்படாத அறிக்கையால் கவலையடைவதாகக் கூறியுள்ளது.
இரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உக்ரைனின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்றார்.

இலக்குகள் நிறைவேறும் வரை  உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் – புதின் 
வடக்கு உக்ரைனில் வீடுகள், வயல்வெளிகள், தெருக்களில் கண்ணிவெடிகளை ரஷிய படைகள் புதைத்துச்சென்றுள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டி உள்ளார்.
உக்ரைன் மீதான ரஷிய போர் 46 லட்சம் மக்களை அகதிகளாக்கி வெளிநாடுகளுக்கு ஓட வைத்துள்ளது. அண்டை நாடான போலந்துக்கு மட்டுமே 26 லட்சம் பேர் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் 10 ஆயிரம் உக்ரைன் அகதிகள் நுழைந்துள்ளனர் என அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை ரோந்து படையினர் தெரிவித்தனர்.
ரஷியா தனது கொடூர தாக்குதலை தொடங்கியது முதல், உக்ரைனின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் உக்ரைனியர்கள் செக் குடியரசின் 2-வது பெரிய நகரமான பர்னோவில் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அவர்கள், துப்பாக்கிகளை பாதுகாப்பாக கையாள்வதற்கான திறன்களை பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைன் போர் தொடங்கிய 6 வாரங்களில் மூன்றில் இரு குழந்தைகள், வீடுகளை விட்டுவெளியேறி உள்ளனர். இதுபற்றி யுனிசெப் அவசர கால திட்ட இயக்குனர் மனுவேல் பான்டெயின் கூறும்போது, “உக்ரைனின் 75 லட்சம் குழந்தைகளில் 48 லட்சம் குழந்தைகள் இடம் பெயர்ந்திருப்பது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது” என குறிப்பிட்டார்.
உக்ரைனில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரையில் 186 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 344 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என உக்ரைன் அரசு தலைமை வக்கீல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
938 கல்வி நிறுவனங்கள் ரஷிய படைகளின் தாக்குதல்களில் சேதம் அடைந்துள்ளன. 87 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
வடக்கு உக்ரைனில் வீடுகள், வயல்வெளிகள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் ரஷிய படைகள், கண்ணிவெடிகளை புதைத்து விட்டு சென்றுள்ளன என்ற புதிய குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி முன்வைத்துள்ளார். ஒவ்வொரு நாளும் இப்போது இந்த கண்ணிவெடிகளை உக்ரைன் படையினர் அகற்றிக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “எங்கள் மக்களை முடிந்தவரை கொல்ல வேண்டும் அல்லது ஊனப்படுத்த வேண்டும் என்று வேண்டுமென்றேதான் எல்லாவற்றையும் ரஷிய படையினர் செய்துள்ளனர்” என குறிப்பிட்டார்.
லிதுவேனிய நாடாளுமன்றத்தில் நேற்று காணொலிக்காட்சி வழியாக பேசிய அவர், ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை அதிகரிக்குமாறு ஐரோப்பிய யூனியனை கேட்டுக்கொண்டார்.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனும், ரஷியாவும் போட்டி போட்டுக்கொண்டு படைகளை கட்டியெழுப்புகின்றன. ரஷியா புதிய படைகளை அனுப்புவதாக பி.பி.சி.யிடம் உக்ரைனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே நேரத்தில் உக்ரைனும் தனது படைகளை அங்கு வலுப்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே போர் தொடங்கிய நாள் முதல் ரஷியாவின் முற்றுகையின்கீழ் உள்ள மரியுபோல் நகரில் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைனில் புச்சா மாவட்டத்தில் காரில் வந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேரை ரஷிய படையினர் சுட்டுக்கொன்றனர். அந்தக் குழந்தைகள் ஒரு வயது மற்றும் 14 வயது உடையவர்கள்.
இந்த நிலையில் கிமெல்னிட்ஸ்கி பிராந்தியத்தில் விமானப்படை தளத்துக்குள் இருக்கும் ஆயுத கிடங்கையும், ஒரு போர் விமானத்தையும் நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல் ரஷிய படைகளின் தாக்குதலில் கீவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு ஆயுத கிடங்கும் நிர்மூலமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரஷியாவின் இலக்குகள் நிறைவேறும் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “திட்டமிட்டப்படி ராணுவ நடவடிக்கை நடக்கிறது. இழப்புகளை குறைக்க விரும்புவதால் நாங்கள் வேகமாக நகரவில்லை. இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தனது முன்மொழிவுகளில் பின்வாங்கியதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. எனவே தாக்குதலை தவிர ரஷியாவுக்கு வேறு வழியில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.