அபுஜா,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் அந்த நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க அங்கு பல்வேறு ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
‘பண்டிட்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த கொள்ளை கும்பல்கள் பள்ளி மாணவ-மாணவிகளை கடத்தி மிரட்டி பணம் பறிப்பது, கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று பணம் மற்றும் கால்நடைகளை திருடி செல்வது போன்ற நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவின் தலைநகர் ஜோஸ் நகரில் உள்ள 4 கிராமங்களுக்குள் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் புகுந்தது.
மோட்டார் சைக்கிள்களில் சென்ற 100-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் வீடுகளில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட அனைவரையும் வீதிக்கு தரதரவென இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
பின்னர், வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வீடுகளுக்கு தீவைத்தனர்.
கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலில் 70 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும், ஏராளமான கிராம மக்களை கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவின் கதுனா மாகாணத்தில் பயணிகள் ரெயிலை வழிமறித்து, துப்பாக்கிச்சூடு நடத்திய கொள்ளை கும்பல் 8 பேரை கொலை செய்துவிட்டு ஏராளமான பயணிகளை கடத்தி சென்றது நினைவுகூரத்தக்கது.