புதுடெல்லி: உத்தரப்பிரதேச மேல்சபையின் 36 எம்எல்சிக்களுக்கான தேர்தல் முடிவுகளில் சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேபோல், வாரணாசியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை அடுத்து அதன் மேல்சபையின் 27 எம்எல்சி பதவிகளுக்கும் தேர்தல் ஏப்ரல் 9 இல் நடைபெற்றது. உ.பி.,யின் எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் அளித்த வாக்குகளில் 98.11 சதவிகிதம் பதிவாகின. நேற்று வெளியான இதன் முடிவுகளில் பாஜக கூட்டணியின் 24 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 36 எம்எல்சிக்களுக்கான தேர்தலில் பாஜகவின் 9 வேட்பாளர்கள் ஏற்கெனவே வென்றதாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு, அந்த 9 பேரை எதிர்த்து எவரும் மனுக்களை தாக்கல் செய்யாதது காரணமானது. மொத்தம் 100 உறுப்பினர்கள் கொண்ட உ.பி. மேல்சபையில், பாஜகவிற்கு தற்போது மூன்றில் இரண்டு பங்காக சுமார் 64 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். இது உபி மேல்சபையில் சமீபகால வரலாற்றில் முதன்முறை எனக் கருதப்படுகிறது. இதன்மூலம், உ.பி. சட்டப்பேரவையின் 403 இல் 275 தொகுதிகள் பெற்று இரண்டு சபைகளிலும் பாஜக தனிமெஜாரிட்டி கொண்ட கட்சியாகி விட்டது.
தற்போது உபி மேல்சபையில் ஆளும் பாஜகவிற்கு 34, அகிலேஷ்சிங்கின் சமாஜ்வாதி 17, மாயாவதியின் பகுஜன் சமாஜ்(பிஎஸ்பி) 4 மற்றும் காங்கிரஸ், அப்னா தளம்(சோனுலால்), நிஷாத் ஆகிய கட்சிகள் தலா ஒன்று என உறுப்பினர்களை கொண்டுள்ளனர். மேலும், தலா 2 எம் எல் சிக்களை கொண்ட இருஆசிரியர் குழுக்களில் 4 மற்றும் தலா ஒன்று பெற்ற சுயேச்சைகளின் இரண்டு குழுக்களுக்கு 2 எம்எல்சிக்களும் இடம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள 36 எம்எல்சிகளின் பதவிகள் காலாவதியாகி தற்போது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் தோல்வி அச்சத்தினால், போட்டியிலிருந்து விலகின. இதன் காரணமாக, ஆளும் பாஜக மற்றும் எதிர்கட்சியான சமாஜ்வாதி கூட்டணிக்கு இடையே முக்கியப் போட்டி இருந்தது. இதில், புதிய எம்எல்சிக்களாக பாஜக 24, சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
அகிலேஷிங் யாதவின் சமாஜ்வாதியும் அதன் கூட்டணியின் ஒரு வேட்பாளருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இது உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, ‘இந்த வெற்றியின் மூலம் உ.பி.வாசிகள் தமக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் மீதுள்ள நம்பிக்கையை மீண்டும் நிரூபித்துள்ளனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் பாஜக உ.பி.யின் இரு சபைகளிலும் தாம் விரும்பும் மசோதாக்களை தங்குதடையின்றி நிறைவேற்ற முடியும் சூழல் உருவாகி உள்ளது. வழக்கமாக உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடைபெறும் அதன் மேல்சபை தேர்தலில் ஆளும்கட்சியே வெற்றி பெறுவது வழக்கம். கடந்த 2004 இல் முதல்வராக முலாயம்சிங் அமர்ந்த பின் மேல்சபையின் 36 இல் சமாஜ்வாதிக்கு 24 இல் வெற்றி கிடைத்தன. 2010 இல் பிஎஸ்பியின் மாயாவதி முதல்வராக பின் மேல்சபையின் 36 இல் அவருக்கு 34 உறுப்பினர்கள் கிடைத்தனர்.
சமாஜ்வாதியின் முதல்வராக அகிலேஷ்சிங் யாதவ் வகித்த போது 2016 தேர்தலில் மேல்சபையின் 36 இல் அவர் 31 உறுப்பினர்கள் பெற்றிருந்தார். எனினும், தற்போது பாஜக பெற்றிருப்பது போல், 3 இல் 2 பங்கு எந்த கட்சிக்கும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
பாஜகவிற்கு வாரணசியில் தோல்வி
எனினும், பாஜகவிற்கு பிரதமர் நரேந்திரமோடியின் வாரணாசி மாவட்டத்திற்கான மேல்சபையில் தோல்வி கிடைத்துள்ளது.
உ.பி. மேல்சபையில் 27 எம்எல்சிக்களுக்கான தேர்தலில் 24 பெற்ற பாஜகவிற்கு மூன்றில் தோல்வி கிடைத்தது. இதில் ஒன்றாக வாரணாசியில் போட்டியிட்ட சுதாமா பட்டேல் 170 வாக்குகளுடன் மூன்றாவது இடம் பெற்று தனது வைப்புத் தொகையை இழந்துள்ளார். இங்கு சமாஜ்வாதி வேட்பாளர் 345 வாக்குகளுடன் இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார்.
பாஜக தோல்வியுற்ற வாரணாசியில் வென்றது சுயேச்சையான அன்னபூர்ணா சிங். இவர் உ.பி.யின் குற்றப்பின்னணி அரசியல்வாதியான பிரிஜேஷ்சிங்கின் மனைவி. இவருக்கு 4,234 வாக்குகள் கிடைத்தன.
இது, உ.பி. பாஜகவை கவலைகொள்ள வைத்துள்ளது. இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உ.பி., பிஹார் மற்றும் மகராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே மேல்சபை உள்ளது குறிப்பிடத்தக்கது