பொதுமக்களின் போக்குவரத்து பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவரும் நிலையில் தமிழக அரசு பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த சென்னையில் 500 பேருந்துகளுக்கு பானிக் பட்டன் பொருந்தியுள்ளது.
இந்த திட்டத்தை நிர்பயா கார்பஸ் நிதியில் இருந்து சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம், 500 பேருந்துகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்கள் மற்றும் பெண்களின் கல்லூரிகள் இருக்கும் இடங்களை இணைக்கும் வழித்தடங்களில், பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 25 (அண்ணா சதுக்கம் – பூந்தமல்லி), 76V (கோயம்பேடு – சிறுசேரி) மற்றும் 70V (பெருங்களத்தூர் – கோயம்பேடு) போன்ற வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் அதிகமாய் காணலாம். விரைவில், இந்த திட்டம் நகரின் அனைத்து 2,800 MTC பேருந்துகளிலும் பொருத்தப்படும்.
பானிக் பட்டன் எப்படி செயல்படும்:
பேருந்தில் யாரேனும் பாதுகாப்பு இல்லாமல் அல்லது பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டால், புகாரளிக்க பானிக் பட்டனை அழுத்தவேண்டும்.
பானிக் பட்டனை அழுத்தியதும், பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகத்தில், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை அனுப்பப்படும். பானிக் பட்டன் பொருத்தப்பட்ட பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், மையத்தில் பணியமர்த்தப்பட்ட குழு, நேரலை வீடியோ காட்சிகளைக் கண்காணித்து, காவல்துறை உதவி எண்ணுக்கு (100) எச்சரிக்கையை அனுப்ப முடியும், இதனால் அருகிலுள்ள ரோந்து வாகனம் எந்த நேரத்திலும் அந்த இடத்தை அடைய முடியும்.
இந்த வசதி பெண்களின் பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுடன் மோதல்களில் ஈடுபடும் நபரைக் கண்டுபிடிப்பதற்கும், இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கும் உதவும் என்று ஓட்டுநர் ஒருவர் கூறியுள்ளார்.
பானிக் பட்டன் பொறுத்தப்பட்டதில் ஒரு இன்னல் என்னவென்றால், பேருந்தில் பயணம் செய்யும் மக்களில் பலர் அதிக ஆர்வத்தினால் பட்டனை அழுத்தி, போலி எச்சரிக்கை விடுகின்றனர். இதனால் கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இது புதிதாக கொண்டுவரப்படும் பயனுள்ள திட்டத்தை முறைகேடு செய்வதுபோல இருப்பதால், மக்கள் சற்று கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரி கேட்டுக்கொள்கிறார்.