புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியின் நெருங்கிய நண்பரான சுபாஷ் சங்கர் பராபை சிபிஐ கைது செய்துள்ளது. கெய்ரோவிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரை சிபிஐ கைது செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,578 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நீரவ் மோடி மற்றும் அவரது நெருங்கிய சகாவான பராப் மீது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி நோட்டீஸ் (இன்டர்போல்) அனுப்பப்பட்டது. மோடி நிறுவனத்தில் பணி புரிந்த 12 பணியாளர்களை வளமான எதிர்காலம் இருப்பதாக உறுதியளித்து துபாய், ஹாங்காங், கெய்ரோ ஆகிய இடங்களுக்கு மாற்றியதாகவும் மோசடியில் இவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்விதம் மாற்றம் செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவருமே போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்விதம் செயல்பட்ட 100 வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் செயல்பட்ட 250 நிறுவனங்களை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
எகிப்தின் கெய்ரோ புறநகர் பகுதியில் உள்ள இரண்டு பங்களாக்களில் இந்த பணியாளர்கள் நான்கு, ஐந்து மாதங்களாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். தங்களின் மோசடிக்கு உடந்தையாக செயல்படுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பாஸ்போர்ட்டை பராப் வாங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கெய்ரோவிலிருந்து அனைத்து பணியாளர்களும் தப்பி வந்த பிறகு அவர்களது வாக்குமூலத்தை புலனாய்வு அமைப்புகள் பதிவு செய்துள்ளன.