பீஸ்ட் படத்தில் இந்தி மொழி பற்றிய வசனம் இடம்பெற்றிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் கவனிக்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பெருநகரங்களில் அதிகாலை 4 மணிக்கு ரசிகளுக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. பட்டாசு வெடித்தும், கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும், மேள தாளம் முழங்க நடனம் ஆடியும் விஜய் ரசிகர்கள் திரைப்படத்தை வரவேற்றனர். கரூர் மாவட்டத்தில் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கும் பீஸ்ட் எந்த சிக்கலும் இன்றி திரையிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியுடன் திரையரங்கில் குவிந்தனர்.
‘’உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா; எல்லா தடவையும் இந்தில Translate பண்ணமுடியாது’’ என நடிகர் விஜய் பேசுவது போன்று வசனம் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்தி மொழி திணிப்புக்கு தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் வலுத்துள்ள நிலையில், இந்த வசனம் முக்கியத்துவம் பெறுகிறது. இதேபோன்று, ’’நான் உண்மையான இந்தியன்’’ என்றும் விஜய் பேசியிருக்கிறார். முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளித்த ரசிகர்கள் பலரும், எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்துவிட்டதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.