கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக உண்மை கண்டறியும் குழு அமைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 4-ம் தேதி பிறந்தநாள் விழாவிற்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் சென்றுள்ளார்.பின்னர் பிறந்தநாள் விழாவை முடித்து வீடு திரும்பிய அந்த சிறுமிக்கு மிக கடுமையாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த சிறுமியின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், அந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகனுக்கு தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து இருந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த நடிகை குஷ்பூ, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.