சென்னை: வாகன ஓட்டிகளுக்கு தெரியாமலேயே பல ஆயிரம் வழக்குகளை போக்குவரத்து காவல்துறையினர் அவர்களின் இஷ்டத்துக்கு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் வாகன ஓட்டிகள் கடும் அதிப்தி அடைந்துள்ளனர். மேலும் பல வழக்குகளில் வாகன என்கூட பதியாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவலங்களும் அரங்கேறி உள்ளன. போக்குவரத்து காவல்துறையினர் இதுபோன்ற மெத்தனமான நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால், போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் அதற்கான அபராத தொகையை வசூலிக்க சென்னையில் 10 கால்சென்டர்கள் தொடங்கி வைத்தார். அப்போது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபரை மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொள்வர். அப்படியும் அபராதம் செலுத்தவில்லை என்றால், வீட்டிற்கு சென்று அறிவுறுத்துவர்.அதன் பின்னரும் அபராதம் செலுத்தாவிடில், நீதிமன்றத்தில் ‘வாரண்ட்’ பெற்று, அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கு தெரியாமலேயே சாலை விதிமீறல் உள்பட பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ள அவலம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அதிர்ச்சி கரமான தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி,
பதியப்பட்ட வழக்குகளில், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வழக்குகள், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கே தெரியாமல் பதியப்பட்டு இருப்பதாகவும், பதியப்பட்ட பல வழக்குகளில், விதிமீறிய வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் குறித்த பதிவே இல்லாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும், பல வழக்கு களில், இரு சக்கர வாகன ஓட்டிகள், ‘சீட் பெல்ட்’ அணியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற வழக்குகளை கண்ட உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் வழக்கு பதிவு செய்கிறோம் என்பதுகூட தெரியாமல், மெத்தனமாக சகட்டுமேனிக்கு வழக்கை பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து காவல்துறையில் தற்போது வரை நிலுவையில் உள்ள வழக்குகள் விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக கடந்த 2019ம் ஆண்டு 48,336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் 5,609 வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா காலக்கட்டமான கடந்த 2020ம் ஆண்டில் 24,467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 10,549 வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டில் 29,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 10.748 வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளதும், 2022ம் ஆண்டு மார்ச் வரை 3,871 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதுபோல போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு 30,23,016 வழக்குகளும், 2020ம் ஆண்டு 28,21,270 வழக்குகளும், 2021ம் ஆண்டு 33,92,430 வழக்குகளும், 2022ம் ஆண்டு மார்ச் வரை 13,11,370 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இதில் 50 சதவிகித வழக்குகளில் இன்னும் அபராதம் வசூலிக்கப்பட வில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், இனி சாலை விதி மீறல் தொடர்பாக பதியப்படும் வழக்குகளில், வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் குறித்த தகவல்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும்இ . ”விதி மீறும் வாகன ஓட்டிகளின் வாகன பதிவெண்களை மட்டும் குறித்துக் கொண்டு, அவர்களுக்கே தெரியாமல் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்து காவலர்களுக்கு, போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர், போக்குவரத்து உதவி கமிஷனர் அறிவுறுத்தி உள்ளனர்.
எல்லைமீறும், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறைக்கு கையடக்க இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த கையடக்க இயந்திரத்தை பயன்படுத்தி காவல்துறையினர், சாலை விதிகளை மீறுவோர் மீது அவர்களது இஸ்டத்துக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தவறிழைக்கும் காவலர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.