சென்னை ஐஐடி ஆய்வு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணை ஐஐடி-யில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்குவங்காளத்தை சேர்ந்த மாணவி கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி பி.எச்.டி. படித்துள்ளார். அந்த காலகட்டத்தில் தன்னுடன் பயின்ற சக ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். மாணவியின் புகாரின் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியான மேற்குவங்கத்தின் டைமண்டு ஹார்பர் மாவட்டம் ராய்நகரை சேர்ந்த கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சென்னை போலீசிடமிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு கடந்த 11ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்த நிலையில் சென்னை மாநகர ஆணையர், ஐஐடி சென்னை இயக்குனர், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 15 நாட்களில் பதிலளிக்க நோட்டிஸ் அனுப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான நிலை அறிக்கை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் வெங்கடேசன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய அவர், “மகளிர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், மகளிர் ஆணையம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் ஐஐடி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் 15 நாட்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியை ஐஐடி-யில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்காமல், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை மேற்கொள்கின்றனர்” என்றார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் `குற்றவாளிகளை உடனடியாக ஐஐடி-யில் இருந்து வெளியேற்ற வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் உத்தரவிட்ட பின்னரும் ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றும் கூறினார்.
சமீபத்திய செய்தி: ”பாதிக்கப்பட்ட மாணவியை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள்” – ஐஐடி மாணவியின் வழக்கறிஞர் பேட்டிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM