கொரோனா பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து அரசு மருத்துவமனைகளின் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ‘கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டா காசும் பிடுங்க மாட்டாங்க; உயிரையும் காப்பாத்திக் கொடுத்திடுவாங்க’ என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. தவிர, அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிற நவீன சிகிச்சைகள்பற்றி அவ்வப்போது வெளிவருகிற செய்திகள் மக்களின் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
அப்படியான செய்திகளில் ஒன்றுதான், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் செய்யப்பட்டிருக்கும் சாதனை. திருப்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு அங்கு ‘அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை’ (ரோபாட்டிக் சர்ஜரி) செய்யப்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் என்ன உடல் உபாதை, அவருக்கு என்ன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பதுகுறித்து கிருஷ்ணனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழுவில் இடம்பெற்றிருந்த சிறுநீரக மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயகணேஷிடம் பேசினோம்.
“கிருஷ்ணன் ஒரு பிளம்பர். 44 வயதாகிறது. அவர் சிறுநீர் கழிக்கும்போது அதனுடன் ரத்தமும் சிறு சிறு ரத்தக்கட்டிகளும் வந்திருக்கிறது. தவிர, இடதுபக்க இடுப்பில் கடுமையான வலி இருந்ததோடு, அந்தப் பக்கத்துத் தொடையை அசைக்க முடியாமல் அவஸ்தைபட்டிருக்கிறார். உடனே, வீட்டுக்கு அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கே ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவருக்கு சிறுநீரக நீர்க்குழாயில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து மிகவும் பதறிப்போயிருக்கிறார் கிருஷ்ணன். காவல்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர், உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று கிருஷ்ணனை அறிவுறுத்தியிருக்கிறார்.
இதனையடுத்துதான் கிருஷ்ணன் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவரை இங்கு பரிசோதித்தபோது சிறுநீரகத்தில் உப்பின் அளவு அதிகரித்திருந்தது மட்டுமல்லாமல் அவர் ரத்தச்சோகையுடன் இருப்பதும் தெரிய வந்தது. உடனே, ரத்தப்பரிசோதனைகள், ஸ்கேன், ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்தோம். அவருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் எதுவும் இல்லை என்பதையும் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்துகொண்டோம். தவிர, மயக்கவியல் நிபுணரும் கிருஷ்ணனுடைய உடல்நிலை அறுவை சிகிச்சையைத் தாங்குகிற அளவுக்கு ஃபிட்டாக இருப்பதாக உறுதிசெய்தார். அடுத்ததாக, கிருஷ்ணனுடைய குடும்பத்தாரிடமும் கிருஷ்ணனிடமும் அவருடைய உடல்நிலை குறித்தும், அதற்காகச் செய்யவிருக்கிற அறுவை சிகிச்சை குறித்தும் விளக்கமாக எடுத்துச் சொன்னோம். ஏனெனில், அப்போதுதான் கிருஷ்ணனால் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தர முடியும் என்பதற்காகவே இப்படித் தெரியப்படுத்தினோம்” என்றவர், இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை பற்றி பகிர ஆரம்பித்தார்.
”நான் கடந்த 25 வருடங்களாக சிறுநீரகவியல் மருத்துவராக பணியாற்றி வருகிறேன். 1990-களில் வயிற்றுக்குள் ஓர் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்றால், 95 சதவிகிதம் வரைக்கும் ஓப்பன் சர்ஜரிதான் செய்வார்கள். அதில், ரத்த சேதம் அதிகமிருக்கும்; அறுவை சிகிச்சைக்கான நேரமும் அதிகமெடுக்கும்; தவிர, அந்தக் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான காலகட்டமும் நீண்டதாக இருக்கும். ஆனால், 2000-ம் ஆண்டிலிருந்து லேப்ரோஸ்கோப்பி, அதன்பிறகு எண்டோஸ்கோப்பி, லேசர் என்று அறுவை சிகிச்சைகளின் முறை நவீனமாகிக்கொண்டே இருக்கிறது. இதில், அதிநவீன அறுவை சிகிச்சை முறையான இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சையைத்தான் கிருஷ்ணனுக்குச் செய்தோம்” என்கிற டாக்டர் ஜெயகணேஷ், தன்னுடைய சொந்த முயற்சியால் 2015-ல் அமெரிக்காவின் பஃபலோ மாகாணத்துக்குச் சென்று இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை செய்முறையில் பயிற்சிபெற்றவர்.
”என்னுடைய நண்பர் அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் ரோபாட்டிக் சர்ஜரி மருத்துவராகப் பணியாற்றுகிறார். அவரிடமும் இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சையில் பயிற்சிபெற்றேன். பிறகு அப்போலோ மருத்துவமனையில் கன்சல்டன்ட்டாக இருந்தபோதும் இந்தத் துறையில் எனக்குத் தொடர்ந்து பயிற்சி கிடைத்துக்கொண்டே இருந்தது. அப்போதெல்லாம், ‘ஏன் அரசு மருத்துவமனைகளிலும் இயந்திர மனிதவியல் மருத்துவம் நடைமுறைக்கு வரக்கூடாது; அது சாமானிய மக்களுக்கும் கிடைக்கும் காலம் எப்போது வரும்?’ என்று யோசித்திருக்கிறேன். இதோ, கிருஷ்ணன் விஷயத்தில் அது நடந்துவிட்டது. அதுவும், அகில இந்திய அளவில் ஒரு மாநில அரசு மருத்துவமனையில் நடந்த முதல் இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை நம் தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. அதில், எங்கள் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கும் எனக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதை நினைக்கும்போது சொல்வதற்கு வார்த்தைகளில்லை என்னிடம்.
இந்த அறுவை சிகிச்சை முறை மற்ற அரசு மருத்துவமனைகளிலும் படிப்படியாக ஏற்படுத்தப்படப்போகிற அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். அதற்குள், என்னுடைய பல மருத்துவ மாணவர்களை இந்தத் துறையில் சிறந்து விளங்கும்வண்ணம் பயிற்சி கொடுத்து விடுவேன்” என்றார்.
” கிருஷ்ணன் அறுவை சிகிச்சை முடிந்த இரண்டே நாளில் உடல்நலம் தேறி சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்” என்று மகிழ்ச்சி முகம் காட்டுகிற டாக்டர் ஜெயகணேஷ், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விமலா மற்றும் மயக்கவியல் நிபுணர் பார்த்தசாரதி ஆகியோரின் உதவியில்லாமல், இந்த நவீன மருத்துவ முயற்சி சாத்தியப்பட்டிருக்காது என்பதையும் குறிப்பிடுகிறார்.