டெல்லி: நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் தொடர்பான மனுவை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகள், ஆசிரியை, அலுவலர்கள் உள்ளிட்டோர் ‘ஹிஜாப்’ ஆடை அணிந்து வருவதற்கு அம்மாநில அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசின் அரசாணை செல்லும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த சிலரை போலீசார் கைது செய்தனர். அதில், தமிழகத்தை சேர்ந்த ஒருவரையும் கர்நாடகா போலீசார் கைது செய்தனர். மேலும் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனக்கோரி ரஹமத்துல்லா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, ‘ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் நீதிபதி ஒருவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டார். நீதிபதிகளுக்கு எதிராக ஆங்காங்கே மிரட்டல்கள் வருகின்றன. எனவே, நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் தொடர்பான மனுவை விசாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது. இவ்விவகாரம் இரு மாநில அரசுகள் தொடர்புடையது என்பதால், நாங்கள் நேரடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இருந்தாலும் மனுதாரர் கோரிக்கைக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.