செங்கோல் ஏந்தி பட்டத்து அரசியாக மதுரை மீனாட்சி முடிசூடும் பட்டாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனமுருகி வேண்டினர்.
கோயில் நகரமான மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பிரியா விடை அம்மனுடன் எழுந்தருளி மாசி வீதிகளில் உலாவந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நேற்றிரவு நடைபெற்றது. வெள்ளி சிம்மாசனத்தில் அலங்கார ரூபினியாக காட்சியளித்த மீனாட்சி அம்மனுக்கு, பட்டத்து அரசியாக கிரீடம் சூட்டப்பட்டது. ரத்தின ஆபரணங்கள் இழைத்த செங்கோல் வழங்கப்பட்டு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
மதுரையின் அரசியாக பட்டம் சூடிய மீனாட்சியை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM