பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) சார்பில் ஜலதாரே என்ற பெயரில் நீர்ப்பாசன திட்ட விழிப்புணர்வு இயக்க ரத யாத்திரையை தொடங்க முடிவு செய்தது. அந்த ரத யாத்திரை தொடக்க விழா ராமநகரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொண்டு அந்த ரத யாத்திரையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தின் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் பேசினேன். அவ்வாறு பேசும்போது நான் அவமானங்களை சந்தித்தேன். இது கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த நான் எனது இறுதி மூச்சு வரை போராடுவேன். கர்நாடகத்தின் நீரை பாதுகாக்க நான் கடைசி வரை போராடுவேன். எனக்கு மூட்டு வலி இருக்கிறது.
ஆனால் என் தலையில் உள்ள வலியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. நான் கொடுத்த வாக்குறுதியை நான் எப்போதும் மறந்தது இல்லை. எல்லாவற்றையும் சகித்து கொண்டுள்ளேன். ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஒழிக்க யாராலும் முடியாது. இந்த ஜலதாரே இயக்கம் தேர்தலுக்காக நடத்தப்படும் மாயாஜாலம் கிடையாது.
நாம் தற்போது நீர் கஷ்டத்தில் உள்ளோம். ஒரு சொட்டு நீருக்கு கூட போராடுகிறோம். விவசாயிகளை எப்போதும் கைவிட மாட்டோம். நீர்ப்பாசனத்திற்காக எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும், என்னை அழைத்தால் அதில் கலந்து கொள்வேன்.
இவ்வாறு தேவேகவுடா பேசினார்.
இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் மத்திய மந்திரி சி.எம்.இப்ராகிம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 15 ரத யாத்திரை வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வாகனங்கள் மாநிலம் முழுவதும் சென்று கர்நாடகத்தில் உள்ள ஆறுகளின் நீரை சேகரித்து பெங்களூரு கொண்டு வர உள்ளது.