மலையகத்தின் சமவெளி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தேயிலைத் தோட்டங்களும் நெல் வயல்களும் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றன. காபி,குறுமிளகு, ஏலக்காய் போன்றவை பயிரிடப்படும் அதே வேளையில் நாட்டு காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கோடை வெயிலில் நல்ல மகசூல் தரக்கூடிய பாகற்காய்,பஜ்ஜி மிளகாய் போன்றவற்றைப் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டிருக்கும் பாகற்காய்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன.
கூடலூர் விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலையில் பாகற்காய்களை மொத்தமாக வாங்கும் இடைத்தரகர்கள் கேரளச் சந்தைகளில் அதிக லாபத்தில் விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த புகார் குறித்து விசாரித்த அதிகாரிகள்,விவசாயிகளிடம் உரிய விலைக்கு பாகற்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
விஷு பண்டிகையை முன்னிட்டு தற்போது விவசாயிகள் பாகற்காய்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாகற்காய் விலை மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவித்த இடைத்ததரகர்கள், விவசாயிகளிடம் பாகற்காய்களை வாங்க மறுத்துள்ளனர். அறுவடை செய்த பாகற்காய்கள் வீணாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக இடைத்தரகர்களிடம் விவசாயிகள் முறையாட்டும் எந்தப் பயனும் இல்லை என்பதால், அறுவடை செய்த பாகற்காய் மூட்டைகளைக் கொண்டு வந்து கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கொட்டினர். அதிரச்சியடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள், இடைத்தரகர்களை உடனடியாக வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இடைத்தரகர்களின் அடாவடி குறித்து பேசிய விவசாயி ஒருவர்,”சித்திரை நாள்,விஷு பண்டிகைக்கு நியாயமான விலை கிடைக்கும்னுதான் பாகற்காய் அறுவடை செஞ்சோம்.ஒரு கிலோ பாகற்காய் கேரளா மார்க்கெட்டுல 50 ரூபாய்க்கு மேல விலை போகுது.எங்கக்கிட்ட 10,15 ரூபாய்க்குக் கூட வாங்க முடியாதுன்னு சொல்றாங்க. காய் கொஞ்சம் வளைஞ்சிருந்தாக்கூட வேண்டாம்னு கிழிச்சிக் கட்டுறாங்க.இடைத்தரகர்கள் மட்டும் நல்லா இருக்கனும் விவசாயி மட்டும் மண்ணோட மண்ணாப் போகணும். பாடுபட்ட எங்களுக்கு 10 ரூபாய் கெடைக்கக்கூடாதுன்னா என்ன நியாயம்? அரசாங்கம் தலையிட்டு எங்களுக்கு சரியான விலை கிடைக்க உத்தரவாதம் கொடுக்கனும்” என்றார் ஆதங்கத்துடன்.
இந்த விவகாரத்தை நீலகிரி தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றோம்,”விவசாயிகளின் நலன் கருதி பாகற்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தரையில் கொட்டிய பாகற்காய்களை இடைத்தரகர்கள் வாங்கிச் சென்றனர். உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.