கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏழு வாரப் போரில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பத்திரிகையாளர்களில் 20 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைனின் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் இன்று (ஏப்., 13) அறிவித்தது.
ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியானது. ஏற்கனவே ரஷ்யாவில் நினைத்ததை எழுதவும் பேசவும் செய்தால் சிறை நிச்சயம் என்ற நிலை இருந்தது. அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சியே அரசு மீது ஊழல் குற்றம்சாட்டியதால் செத்துப் பிழைத்து தற்போது சிறை கம்பிகளுக்கு பின்னே உள்ளார். போர் தொடங்கிய பின் ரஷ்யாவிலிருந்து 150 பத்திரிகையாளர்கள் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. 40 செய்தி நிறுவனங்கள் தங்கள் பணியை நிறுத்தியுள்ளன. போர் பற்றிய போலி செய்திகளை ரஷ்யாவில் வெளியிட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் 20 பத்திரிகையாளர்கள் இறந்திருப்பதாக அறிவித்துள்ளனர். இது பற்றி உக்ரைன் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: இந்த போர் யாரையும் விட்டு வைக்கவில்லை. படை வீரர்கள், பொது மக்கள், ஊடக பணியாளர்கள் என அனைவரது உயிரையும் எடுத்துவிட்டது. போரின் போது பணியில் இருந்த 20 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க ஆவணப்படத் தயாரிப்பாளரான ப்ரென்ட் ரெனாட், ஐரிஷ் ஒளிப்பதிவாளர் பியர் ஜாகிர்செவ்ஸ்கி, லிதுவேனிய ஆவணப்பட இயக்குநர் மந்தாஸ் ஆகியோர் இதிலடங்குவர். ரஷ்ய பத்திரிகையாளர் ஓக்சானா பவுலினாவும் யுத்த களத்தில் கொல்லப்பட்டார். உக்ரேனிய பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் 78 வயது நபருமான யேவ்ஹென் பால் என்பவர் மரியுபோல் அருகே ரஷ்ய ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். என தெரிவித்துள்ளனர்.
Advertisement