”இந்தி குறித்து அமித்ஷா கருத்து தவறாக முன்னெடுத்து செல்லப்படுகிறது” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊசுடு தொகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தீனதயாள் உபாத்தியாயா கிராமபுற திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிற்சி மையம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறந்த விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது, நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன்,
”இந்தி குறித்து அமித்ஷா கூறியது பற்றி ஆளுநர் என்ற முறையில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இருப்பினும் அமித்ஷா கூறிய கருத்து தவறாக முன்னெடுத்து செல்லப்படுகிறது. எல்லோரும் தாய்மொழி பற்றோடு இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து. தாய்மொழிக்கு மரியாதை கொடுக்கும் எண்ணத்தில் தான் அமித்ஷா கூறியிருப்பார். அமித்ஷா வருகின்ற 24 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள அரவிந்தர் ஆசிரம நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார். புதுச்சேரிக்கு அமித்ஷா வருவது ஆக்கப்பூர்வமாகவும் பக்கபலமாகவும் இருக்கும்” என்று தமிழிசை கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM