கீவ்:மரியுபோல் நகரில், உக்ரைன் ராணுவ வீரர்கள், 1,026 பேர், சரணடைந்துள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, கீவ் நகரில் இருந்து வெளியேறிய ரஷ்ய படையினர், நாட்டின் கிழக்குப் பகுதிகளில், தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். கார்கிவ் நகரில், ரஷ்ய படையினர் நேற்று நடத்திய பீரங்கித் தாக்குதலில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்; 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, துறைமுக நகரமான மரியுபோல், ரஷ்ய வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. அங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிக்கி உள்ளதாக மேயர் வாடிம் பொய்சென்கோ தெரிவித்து உள்ளார். இந்நிலையில், மரியுபோலில், 162 அதிகாரிகள் உட்பட உக்ரைன் ராணுவத்தினர், 1,026 பேர், ரஷ்ய படையிடம் சரணடைந்துள்ளதாக, ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதமாக, நான்கு நாடுகளின் தலைவர்கள், உக்ரைனுக்கு விரைந்துள்ளனர். லிதுவேனியா அதிவர் கிடானஸ் நவுசேடா, எஸ்டோனியா அதிபர் அலார் காரிஸ், போலந்து அதிபர் ஆண்டர்செஜ் டூடா, லாட்வியா அதிபர் எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோர், கீவுக்கு சென்றுள்ளனர்.
இனப்படுகொலை
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் துவங்கியது முதல், ரஷ்யாவை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஜோ பைடன் கூறியதாவது: உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது. உக்ரேனிய மக்களை இல்லாமல் ஆக்குவது தான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் எண்ணமாக உள்ளது. அதை, இந்த போர் உறுதிபடுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement