புதுடெல்லி: ஒமிக்ரான் வைரசின் பிற பிறழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோயியல் தரவுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒமிக்ரான் வைரஸ் உலகளவில் பரவி வரும் ஆதிக்கம் மிகுந்ததாக ஒன்றாக நீடித்து வருகிறது. ஒமிக்ரான் வைரசின் பல்வேறு பிறழ்வுகளை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. பிஏ1, பிஏ2, பிஏ3 மற்றும் தற்போது பிஏ4 மற்றும் பிஏ5 உட்பட ஒமிக்ரானின் மாறுபாட்டின் கீழ் கவலைதரக்கூடிய பிறழ்வுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் பிஏ.1/பிஏ.2 மற்றும் தற்போது உள்ள எக்ஸ்இ போன்ற மீளிணைத்திறன் வடிவங்களையும் உள்ளடக்கியவை. பிஏ.4 மற்றும் பிஏ.5 வைரஸ் பிறழ்வுகளின் வரிசைகள் ஒரு சில நாடுகளில் இப்போது கண்டறியப்பட்டுள்ளன. இந்த பிறழ்வுகளின் பண்புகள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக விஞ்ஞானிகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு பணியாற்றி வருகிறது. சார்ஸ்-கோவி-2 வைரஸ் தொடர்ந்து உருவாகி வருகிறது. உலகளாவிய தீவிர பரவுதல் மற்றும் அவற்றின் திரிபுகள் தொடர்ந்து வெளிப்படலாம். எனவே, அனைத்து நாடுகளும் தொடர்ந்து தொற்று பரவலை கண்காணியுங்கள். தொற்று மற்றும் புதிய பிறழ்வுகள் குறித்த தரவுகளை பிறநாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இந்திய தூதரகம் மூடல்ஷாங்காய் நகரில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஷாங்காய் நகரில் மொத்தமுள்ள 2.5கோடி மக்கள் தொகையில் 66 லட்சம் பேர் மட்டும் நேற்று முன்தினம் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஷாங்காய் இந்திய தூதரகத்தில் தனிநபர் தூதரக சேவைகள் நிறுத்தப்படுகிறது. தூதரக சேவைகளை விரும்புவோர் கிழக்கு சீனாவின் பீஜிங்கில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் அவசர சேவைகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி அதிகரிப்புகொரோனா தொற்று பரவல் காரணமாக ஷங்காய் மற்றும் பிற தொழில் மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் பல்வேறு இடையூறுகள் உருவானது. எனினும் சீனாவில் கடந்த மாத ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதியானது 15.7சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 276.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் இறக்குமதியானது ஒரு சதவீதத்துக்கும் குறைவாக 228.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியனாது கடந்த ஆண்டைக்காட்டிலும் 4 சதவீதம் சரிந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு 8.1 சதவீதமாக உள்ளது.புதிய பாதிப்பு 1088 ஆக அதிகரிப்புஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:* நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 1088 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4,30,38,016ஆக உயர்ந்துள்ளது. * கேரள மாநிலத்தில் தொற்று பாதித்த 19 பேர் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,21,736ஆக உயர்ந்துள்ளது.