இன்று ‘சுபகிருது’ தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இன்று ‘சுபகிருது’ தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ் புத்தாண்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்காட்டியின் ‘சித்திரை’ மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம், நம் வாழ்வில் செழிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் செழுமையான பாரம்பரியத்தின் மகத்துவம் கொண்ட இந்த விழா, நமது பணிகளை நோக்கிய புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. மற்றும் ஒருசிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது கடமைகளை நினைவூட்டுகிறது. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: இந்தப் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலைக்கவும், இன்பமும், மகிழ்ச்சியும் பெருகவும், கரோனா இல்லாத ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி: புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும். அனைத்து வளமும் பெருகும் வகையில், தாய் தமிழ் நாட்டினை மேலும் உயர்த்திட இத்திருநாளில் உறுதி ஏற்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மத்திய பாஜக அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலமும், வளமும் கிடைக்க வேண்டும். அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் உறுதியேற்றுக் கொள்வோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஒளிமயமான எதிர்காலம் தமிழ் குலத்துக்குக் கட்டியம் கூறும் இவ்வேளையில், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், தமிழக மீனவர்களின் அல்லல்களை அகற்றவும், விவசாயிகளின் துயர் துடைக்கவும் இச் சித்திரை நாளில் சூளுரை மேற்கொள்வோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பிறக்கும் இந்த வருட தமிழ்ப் புத்தாண்டு இனிவரும் காலங்களில் மக்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படாமல் இருக்கவும், தொழிலும், பொருளாதாரமும் மேம்படுவதற்கும் புதுப்பொலிவை ஏற்படுத்திக் கொடுக்கட்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: உலகிலேயே தொன்மையான இலக்கிய, இலக்கண வளங்கள் நிறைந்த தமிழைப் பேசும் மூத்த குடிமக்களுக்கு, சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும் புத்தாண்டு எல்லா வளங்களையும் நலன்களையும் தரட்டும்.

காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர்: தமிழ் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் துயரம் நீங்கிடவும், வாழ்வில் வளமும், நலமும் பெருகிடவும் பிரார்த்திக்கிறேன்.

பெரம்பலூர் தொகுதி எம்.பி. டாக்டர் பாரிவேந்தர்: புத்தாண்டில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பீடுநடை போட்டு, தமிழர்தம் வாழ்வில் மகிழ்ச்சியும், மனநிறைவும் பொங்கி பெருகட்டும். தமிழ் புத்தாண்டை கொண்டாடும் உலகெங்கும் வாழும் அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், வி.கே.சசிகலா, ஐஜேகே தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, சமக தலைவர் சரத்குமார், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் விஎம்எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.