கீவ் (உக்ரைன்): உக்ரைனில் நடந்து வரும் போரில் 1,000-க்கும் அதிகமான உக்ரைன் வீரர்கள் சரணடைந் துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. ஒன்றரை மாதத்துக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால் உக்ரைன் நகரங்கள் உருக்குலைந்துள்ளன. தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ரஷ்யா இனப் படுகொலை செய்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் உக்ரைன் ராணுவம் திணறிவருகிறது. இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தின் 1,000-க்கும் அதிகமான வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான மரியுபோல் நகரில் உக்ரைனின் 36-வது படைப்பிரிவை சேர்ந்த 1,062 வீரர்கள் தங்கள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 162 பேர் அதிகாரிகள் என்றும் 47 பேர் பெண்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பது குறித்து உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், நேற்று காலை உக்ரைன் அதிபரின் ஆலோசகர் ஒலெக்ஸி அரிஸ்டோவிச் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘36-வது படைப்பிரிவை சேர்ந்த ராணுவத்தினர் மற்ற படையினருடன் இணைந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். ரஷ்ய ஆதரவாளர் கைது உக்ரைனில் இருந்து கொண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வந்த அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக், ஏற்கெனவே, கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தீவிரவாதிகளுக்கு உதவியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. போர் தொடங்கிய நேரத்தில் வீட்டுக் காவலில் இருந்து விக்டர் மெட்வெட்சுக் தப்பிவிட்டார். தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த உக்ரைன் உளவுத்துறை அதிகாரிகள், அவரை மீண்டும் கைது செய்துள்ளனர். அவர் கைவிலங்குடன் சிறைபட்டிருக்கும் படத்தை உக்ரைன் அதிபரின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.