தெலங்கானா மாநில ஏ.ஐ.எம்.ஐ.எம்- கட்சியின் எம்.எல்.ஏ அக்பருதீன் ஒவைசி 2012 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்மல் நகரில் உரையாற்றியபோது இந்துக்களுக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரு சமூகத்திற்கு எதிராக எரிச்சலூட்டும் மற்றும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடும் அமளிக்குப் பின் அக்பருதீன் ஒவைசி கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை வழக்கை விசாரித்து 2016-ல் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், அக்பருதீன் ஒவைசி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான சிறப்பு விசாரணை அமர்வு நீதிமன்றம் விடுவித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அக்பருதீன் ஒவைசி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதுக்கு அவரின் சகோதரர் ஏ.ஐ.எம்.ஐ.எம்-கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “அனைவரது பிராத்தனைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
அக்பருதீன் ஒவைசி விடுவிக்கப்பட்டது தொடர்பாகத் தெலங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் ரெட்டி அனுகுலா, “2012 ஆம் ஆண்டு இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கில் எம்.எல்.ஏ விடுவிக்கப்பட்டது டி.ஆர்.எஸ் அரசின் தோல்வி. இதன் மூலம், கே.சி.ஆர் ஒரு இந்து துரோகி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.