சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்க விழா இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு வருகை தந்தார். முதலில் அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல் பிரிவில் 3-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் நெடுஞ்சாலை துறையின் தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்டம்- 2-வது நிதியின் கீழ் ரூ.5.34 கோடி மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ்கள் மக்கள் நல்வாழ்வு துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை கொடி அசைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இருபது 108 ஆம்புலன்ஸ்கள் இந்த திட்டத்திற்காக வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 3-வது பிரிவில் உள்ள 8-வது தளத்துக்கு சென்றார். அங்கு பல்வேறு திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவுக்கு தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.
விழாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 192 அரசு மருத்துவமனைகளில் ரூ.364.22 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன கருவிகளுடன் கூடிய 2,099 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்கள் பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதிநவீன கருவிகளுடன் கூடிய 2,099 தீவிர சிகிச்சை படுக்கைகள் வசதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன்பிறகு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
செங்கல்பட்டில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் உலக தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்பிறகு மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் 8 மருத்துவ கல்லூரிகளில் ரூ.116.47 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் ரூ.8.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களின் கல்வெட்டுக்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.