பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: ஆந்திரா, கேரளாவில் பஸ், டாக்சி கட்டணங்கள் உயர்வு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.101- ஐ தாண்டிவிட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்த இழப்பை ஈடுகட்ட பஸ் கட்டணங்களை உயர்த்த பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. கேரளாவில் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு காரணமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆந்திரா மாநிலத்திலும் போக்குவரத்து கழகம் பெரும் இழப்பை சந்தித்து வந்தது. இதையடுத்து அங்கு பஸ் கட்டணங்களை உயர்த்த அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் அங்கு பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் ஆரம்ப டிக்கெட்டின் விலை ரூ. 10- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கிலோமீட்டருக்கு ஏற்றவகையில் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. டீலக்ஸ் பஸ்சில் ரூ.5, சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டீசல் விலை ஆந்திராவில் ரூ. 60 ஆக இருந்தது. தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில போக்குவரத்து நிர்வாக இயக்குனர் துவாரக திருமலைராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் பஸ் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதின் காரணமாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்களிலும் வேலூர் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ஆந்திர அரசு பஸ்களிலும் இன்று முதல் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து டாக்சி, ஆட்டோ கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் ஆந்திராவில் இன்று முதல் பஸ், டாக்சி கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது. கேரளாவில் மே 1-ந் தேதி முதல் அதிகரிக்கிறது.
கேரளா மாநிலத்தில் பஸ், டாக்சி கட்டணங்களை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அங்கு மே 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கேரள மாநில போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜ் தெரிவித்து உள்ளார்.

பஸ் கட்டண உயர்வுடன் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.