கவர்னர் இன்று மாலை தேநீர் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை:

தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் விலக்கு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் இன்னும் கவர்னரிடம் நிலுவையில் உள்ளது. இதே போல் பல மசோதாக்கள் கவர்னரிடம் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் இன்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்கள்.

கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு முறையானது தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதோடு மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் தமிழக அரசுக்கு என்று இருக்கக் கூடிய உரிமையை அடியோடு தட்டிப்பறிப்பதாக அமைந்திருக்கூடிய காரணத்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்கக் கூடிய வகையில் நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

12-ம் வகுப்பு மாணவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரியில் மாணவர்களின் சேர்க்கை அமைந்திட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு ஆகும்.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் இதை ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு ஏ.கே.ராஜன் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் இந்த நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இது அகற்றப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கடந்த 13.09.2021 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் ஆளுனரின் ஒப்புதலை பெற்று உள்துறைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் ஒன்றிய அரசுக்கு அதை அனுப்பி வைப்பதற்கு பதிலாக தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக ஏறத்தாழ 142 நாட்கள் அந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுனர் வைத்திருந்து அதற்கு பிறகு, அது குறித்து பல்வேறு தரப்புகளிலும் எழுந்த எதிர்ப்புகளையடுத்து அவர் சட்ட முன்வடிவை அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

அப்படி அவர் திருப்பி அனுப்பியதற்கு பிறகு முதல்-அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி இந்த சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த 2 நேர்வுகளிலும் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போதும் ஆளுனர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி முதல்-அமைச்சர், கவர்னரை சந்தித்து இந்த மசோதாவிற்கு அவருடைய ஒப்புதலை அளித்திட வேண்டும் என்று நேரடியாக வலியுறுத்தினார். அப்படி வலியுறுத்துகிற போது இந்த மசோதாவை அரசியலமைப்பு சட்டத்தின்படிதான் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒப்புதல் அளிக்க வேண்டும். வேறு வழியில்லை என்பதை தெரிவித்து அதை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.

ஆனால் உறுதி அளித்ததற்கு பிறகும் தொடர்ந்து அதற்கான ஒப்புதலை ஆளுனர் தரவில்லை. ஆளுனர் மாளிகையிலேயே அது கிடப்பில் இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 31-ந்தேதி முதல்-அமைச்சர் டெல்லிக்கு சென்றபோது பிரதமரையும், உள்துறை மந்திரியையும் சந்தித்து இந்த மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காத நிலையை சுட்டிக்காட்டி வரக்கூடிய கல்வியாண்டில் மருத்துவ மாணவர்களை சேர்க்கக் கூடிய அந்த தேதி மிக விரைவிலேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே அதற்கு முன்பாக விரைவாக முடிவு எடுத்து சேரக்கூடிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கக் கூடிய நிலையில் உடனடியாக இந்த சட்டத்துக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்து அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதற்கான உரிய கடிதத்தை ஆளுனருக்கு நீங்கள் அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இத்தனைக்கு பிறகும் கூட 208 நாட்கள் கடந்து இருக்கிறது. இவ்வளவு நாட்களுக்கு பிறகும் ஆளுனர் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் சட்டமன்றத்துக்கு இருக்கக் கூடிய மாண்புகள், கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது.

எனவே இன்றைக்கு காலையில் நானும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ஆளுனரை சந்தித்து முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி இந்த மசோதாவுக்கு அவருடைய ஒப்புதலை அளித்தட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் ஆளுனர் இன்றைக்கு எங்களிடம் பேசும்போது இந்த மசோதாவை உடனடியாக ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதற்கு எந்தவிதமான கால வரையறையும் ஆளுனர் இன்னும் தெரிவிக்காத சூழ்நிலை இருக்கிறது.

மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான காலம் வெகு விரைவில் வந்திருக்கிறது. ஆளுனர் இதற்கான ஒப்புதலோடு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இதற்கு பெற்று விரைவாக வந்தால்தான் வரக்கூடிய கல்வி ஆண்டிலாவது 12-ம் வகுப்பு மாணவர்கள் 12-வது வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரியிலே அவர்கள் சேரக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும்.

எனவே இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. எனவே இந்த சந்திப்பின் போதும், ஏற்கனவே முதல்-அமைச்சரிடம் உறுதி அளித்ததன்படி இந்த மசோதாவை உடனடியாக ஒன்றய அரசின் ஒப்புதலுக்கு ஆளுனரின் ஒப்புதலோடு அனுப்பி வைப்பதற்கு ஆளுனர் எந்தவிதமான ஒரு உத்தரவாதத்தையும் எங்கள் இருவரிடத்திலும் அளிக்கவில்லை.

எனவே தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய ஒட்டு மொத்த மக்களுடையஉணர்வுகளை கிராமப்புற ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மாண்பினை இன்றைக்கு கருத்திலே கொள்ளாமல் அவற்றை இந்த சட்ட முன்வடிவு நான் குறிப்பிட்டு இருக்கக் கூடிய அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கக் கூடிய வகையில் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒன்று நம்முடைய சட்டமன்றத்தின் மாண்பு, இரண்டாவது மக்களுடைய உணர்வு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு ஆசைகள். இவற்றையெல்லாம் பிரதிபலிக்கக் கூடிய வகையில் முதல்-அமைச்சரின் முன்னெடுப்பில் நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடிய இந்த சட்டத்துக்கு தன்னுடைய ஒப்புதலை ஆளுனர் இன்னும் தராமல் இருப்பது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது.

கூட்டுறவு சங்கங்களின் சட்ட முன்வடிவும் ஆளுனருக்கு அனுப்பப்பட்டது. ஆளுனர் ஒப்புதல் இன்னும் தராத நிலையில் இருக்கிறது.

அதே போல் இன்னும் சில சட்டங்களுக்கு ஒப்புதல் தர வேண்டியது இருக்கிறது. அவற்றை எல்லாம் எடுத்து சொல்லியும் இவற்றை செய்வதற்கான ஒரு உத்தரவாதத்தையோ, கால வரையறையையோ ஆளுனர் இன்று எங்களுக்கு வழங்காத நிலையில் இன்று மாலை ஆளுனர் மாளிகையில் நடக்க இருக்கக் கூடிய பாரதியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிலும், தேனீர் விருந்திலும் முதல்-அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வது நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினை குலைக்கக் கூடிய வகையிலும், ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வகையிலும் அது அமைந்து விடும் என்கிற காரணத்தால் அந்த இரு நிகழ்வுகளிலும் நாங்கள் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.

இதே போல் கவர்னரின் தேனீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் நிராகரிப்பதோடு, இரட்டை ஆட்சிமுறை போன்ற செயல்பாடுகள் ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமலும், மற்ற முக்கிய மசோதாக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக சட்டமன்ற மாண்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன பிரச்சனை, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் சித்தாந்தத்தை எதிர்க்கும் ஆளுநரின் பேச்சுகள் போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதே போல் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் கவர்னரின் தேனீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில் கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தில் அ.தி.மு.க. கலந்து கொள்கிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், “கவர்னர் ரவி இன்று மாலை அளிக்கும் தேனீர் விருந்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளும்“ என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்… பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: ஆந்திரா, கேரளாவில் பஸ், டாக்சி கட்டணங்கள் உயர்வு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.