வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், தருமபுரி, சேலம், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் கனமழையும், மற்ற பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகம், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று ஒரு நாளுக்கு மட்டும் மேற்குறிப்பிட்ட கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.