பீஸ்ட் பட டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை போலீசார் கைதுசெய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் சுமார் 800 திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி டாக்கீஸ் திரையரங்கில் பீஸ்ட் பட டிக்கெட்டுகள் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் தியேட்டர் வாசலில் பீஸ்ட் பட டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 134 டிக்கெட்டுக்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து டிக்கெட்டை பறிமுதல் செய்த போலீசார் அவரை பிடித்து காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் எம்ஜிஆர் நகரைs சேர்ந்த வேல்முருகன்(37) என்பதும், இவர் விஜய் மக்கள் இயக்கத்தில் விருகை பகுதி தலைவராக இருப்பதும் தெரியவந்தது. மேலும் விஜய் மக்கள் மன்றத்தின் சார்பில் 180 பீஸ்ட் பட டிக்கெட்டுகள் ரசிகர்களுக்காக கொடுக்கபட்டதும், அதில் 46 டிக்கெட்டுகளை மட்டும் ரசிகர்களுக்கு கொடுத்து விட்டு மீதி 134 டிக்கெட்டை 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 134 டிக்கெட்டை பறிமுதல் செய்த போலீசார் வேல்முருகன் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.