நீட் விலக்கு மசோதா | தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் வகையில் விரைவில் அனுப்பவேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பிய கடிதம்:

“தமிழக ஆளுநராக நீங்கள் பொறுப்பேற்ற சில மாதங்களாக நாம் நல்லுறவைப் பேணி வருகிறோம். இந்தக் காலகட்டத்தில், தமிழக மக்களின் விருப்பத்திற்கு எனது அரசு அதிக மதிப்பளிப்பதையும் கவனித்திருப்பீர்கள். அதன்படி, மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, பிளஸ் 2 பொதுத் தேர்வு அடிப்படையில் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற மசோதாவை சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, உங்களுடன் எனது முந்தைய கலந்துரையாடலின்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தது குறித்து விளக்கியிருந்தேன். நீட் தேர்வு என்பது தமிழக மக்களுக்குக் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. அது படிப்படியாக வளர்ந்து, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமித்த கருத்தாக நிறைவேற்றப்பட்டது. அதில் சில சில விளக்கங்கள் மற்றும் மறுபரிசீலனை செய்வதற்காகச் சட்டப்பேரவைக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. அதனை நாங்கள் விரோத நிலைப்பாடாகப் பார்க்கவில்லை.

அதன்படி, அரசியலமைப்பு செயல்முறைக்கு இணங்கி, நீங்கள் எழுப்பிய விஷயங்களைத் தெளிவுபடுத்தி, மீண்டும் மசோதா நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பினோம். உங்களை நேரில் சந்தித்து இது குறித்துத் தான் பேசிய பின்னரும், நீட் தேர்வு மசோதாவானது ஜனாதிபதி ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது. அடுத்த கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகள் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையும், நிச்சயமற்ற நிலையும் உள்ளது.

மேலும், நான் நேரில் சந்தித்து மசோதா குறித்து வலியுறுத்தியபோது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இருமுறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டும், கோரிக்கையினை நேரில் வலியுறுத்திய பின்னரும், முன்னேற்றம் இல்லை. இதனால், எனது அமைச்சரவையின் 2 மூத்த அமைச்சர்கள் உங்களைச் சந்தித்து இக்கோரிக்கையினை மீண்டும் வலியுறுத்த அனுப்பிவைத்தேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த கலந்துரையாடலின் போது மசோதாவானது குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அவர்களுக்குச் சாதகமான உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை.

மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழக சட்டப்பேரவையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பொருத்தமற்றது என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, இனியும் தாமதிக்காமல் நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி, அதன் மூலம் அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும் பொழுது மக்களும், மாநிலமும் வளம் பெறும் என்றும் உங்களுக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும், சுமுகமாகவும் இருக்குமென்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.