RR vs GT: ஹர்த்திக்கின் 4D பெர்ஃபாமன்ஸ்; சேஸிங் பழகாத ராஜஸ்தான் சொதப்பியது எங்கே தெரியுமா?

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் இன்னிங்ஸ், போட்டியின் திருப்பு முனையான ஃபெர்கூசனின் ஓவர், யாஷின் அதிரடி அறிமுகம் என சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகப் போட்டி நகர, தொடரின் தொடக்கத்தில் குறைத்து மதிப்பிடப்பட்ட குஜராத் இந்தப் போட்டியையும் வென்றிருக்கிறது. கிட்டத்தட்ட 200-ஐ தொட்ட இலக்கை எட்டுவதற்கான முன்திட்டமிடல் இல்லாததே ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணமாக மாறியது.

தொடரில் இதுவரை இலக்கை மட்டுமே நிர்ணயித்துப் பழகிய ராஜஸ்தான் ராயல்ஸ், முதல்முறையாக டாஸை வென்று சேஸ் என்றது. சன்ரைசர்ஸுடனான தோல்வியிலிருந்து மீண்டெழ குஜராத்தும் களமிறங்கியது.

இத்தொடரில், குஜராத்தின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பின் ஆயுட்காலம் பவர்பிளே ஓவர்களைவிடக் குறைவு. இப்போட்டியிலும் அச்சாபம் நீங்கவில்லை. நீசம் வீசிய முதல் ஓவரில் இரண்டு லோ ஃபுல் டாஸ் பந்துகள் தண்டிக்கப்பட்டு பவுண்டரிகளானது. இனாமாக இன்னொரு பவுண்டரியும் வந்து “சபாஷ்” போட வைத்து, போல்ட் இல்லாத குறையை அடிக்கடி அறிவித்தது. இருப்பினும், ட்விஸ்ட் அடுத்த ஓவரிலேயே வந்தது.

RR vs GT

பவர்பிளேயில் சிங்கிளுக்காக அவசரப்பட்டு விக்கெட்டை ரன்அவுட்டில் பறிகொடுப்பது செய்யவேகூடாத தவறு. ஆஃப் சைடில் பந்தை அடித்த கில் ஓட, ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு வேட் வரும்முன் ஸ்டெம்ப் தகர்க்கப்பட்டது. இத்தொடரில் 20 ரன்களுக்குக் குறைவாக வேட் எடுப்பது இது நான்காவது முறை. ஆனால் இம்முறை தவறு அவருடையதல்ல.

சரியாக டைமிங் செய்யப்படாத புல் ஷாட், ‘அடுத்த விக்கெட் கில்லுடையதாக இருக்குமோ?’ எனக் கணிக்க வைக்க, “இம்முறை என்முறை” என விஜய் ஷங்கர் வெளியேறினார். அந்த ஓவரில் முன்னதாக குல்தீப் சென் வீசிய பந்துகள் மணிக்கு 145 கிமீ வேகத்திற்கு மேல் வந்து மிரட்ட, அதில் சற்றே தடுமாறிய விஜய் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பல கிலோ மீட்டர்கள் தள்ளிச் சென்ற ஷார்ட் பாலை, “என்னைத் தாண்டித்தான் தம்பி சாம்சனிடம் போக வேண்டும்” என அடித்து, கேட்ச் கொடுத்து வெளியேறி, ‘சாய் சுதர்சனுக்காவது இவ்வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம்’ என்று சொல்லாமல் சொன்னார்.

நான்காவது ஓவரிலேயே சஹாலைக் கொண்டு வந்ததும் சரியான நகர்வாக அமைய, ரன்ரேட் கட்டுப்பட்டது. குல்தீப் ஓவரில் பாண்டியா அடித்த ஹாட்ரிக் பவுண்டரியால் 42 ரன்கள் என சொல்லிக் கொள்ளும்படியான பவர்பிளே ஸ்கோர் வந்து சேர்ந்தது. ஆனாலும் பவர்பிளேவுக்குள் இன்னொரு விக்கெட் எடுத்ததில் கொதிகலனில் குஜராத்தை இட்டது ராஜஸ்தான்.

RR vs GT

அடுத்ததாக சாம்சன் எதிர்பாராத விதமாக ‘பராக்கிற்கு பராக்’ சொல்ல, கில்லினை 13 ரன்களில் அவர் வெளியேற்றினார். முன்னதாக புல் ஷாட்டில் பிழைத்த கில், கேரம் பாலில் வீழ்ந்தார். அவரது அவசரத்தால் வேடின் விக்கெட்டை வீழவைத்தவர், இச்சமயம் தனது விக்கெட்டையும் பொறுமையின்மையால் பறிகொடுத்தார்.

போல்ட்டில்லாத பட்சத்திலும் மூன்று விக்கெட்டுகளை எடுத்ததே ராஜஸ்தானின் கை ஓங்கியதை உணர்த்தியது. ஆனால் குஜராத்தும் மடங்கி விடுவதாக இல்லை. ஹர்திக் பாண்டியா – மனோகரின் இணைந்த கைகள் குஜராத்தைத் தாங்கிப் பிடித்தன. இக்கூட்டணி உருவானபின் மூன்று ஓவர்கள் தாக்குப்பிடிக்க எடுத்துக் கொண்டனர். அதில் மொத்தமே 18 ரன்கள் மட்டுமே வந்திருந்தன. 10 ஓவரில் 72 என மிகச் சுமாராகத் தொடர்ந்தது ரன்ரேட். ஆனால், அஷ்வின் வீசிய போட்டியின் 11-வது ஓவரிலிருந்து ‘அதிரடி ஆரம்பம்’ என அவர்கள் அறிவிக்கைப் பலகையிட, அங்கிருந்து மத்திய ஓவர்கள் நிரம்பவே அடிவாங்கின.

பர்ப்பிள் கேப் ஹோல்டரான சஹாலின் பந்துகளையே பறக்க வைத்து, ‘தான் ஒரு ஸ்பின் ஹிட்டர்’ என்பதற்கு, விளக்கவுரை எழுதிக் கொண்டிருந்தார் மனோகர். சரி வேகத்திற்காவது அடங்குவார்கள் என குல்தீப்பை இறக்கினால் அவரது ஓவரும் மூன்று பவுண்டரிகளால் பரிதவித்தது. அதில் தான் சந்தித்த 33வது பந்தில் ஸ்டைலாக ஒரு பவுண்டரியோடு அரைசதம் அடித்தார் பாண்டியா. போன போட்டியிலும் அரைசதம் வந்திருந்ததெனினும் அதில் ஸ்ட்ரைக்ரேட் குறையாகச் சொல்லப்பட்டிருக்க, அதனை இப்போட்டியில் மாற்றியிருந்தார்.

RR vs GT

அடுத்ததாக அஷ்வினையும் விட்டு வைக்கவில்லை. பேக் டு பேக் சிக்ஸர்களும், அதில் முதல் பந்தை படிக்கல் கோட்டை விட்டதும், பேட்டிங்கில் ரிட்டயர்ட் அவுட் போல பௌலிங்கில் ஓவரின் நடுவில் பேபி கட் செய்வோமா எனுமளவு அஷ்வினை நோகடித்தது.

இருப்பினும், மறுபடித் தொடங்கிய சஹால் – மனோகர் யுத்தத்தில், சஹால் வென்றார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பந்தில் சிக்ஸர் அடித்த மனோகர், அடுத்த பந்தையும் பெரிய ஷாட்டாக்க முயல, “விட்டு விடுவேனா?!” என ஒரு கடினக் கேட்சை அஷ்வின் பிடித்து, 43 ரன்களுக்கு அவரை வெளியேற்றினர். ஸ்பின்னர்கள் இருவரும் சேர்ந்து பழிதீர்த்துக் கொண்டனர்.

எனினும், இதுவும் குஜராத்துக்கே சாதகமாக, டெத்ஓவரின் ஆரம்பத்தில் வந்தது மில்லருக்கான சரியான எண்ட்ரி பாயின்ட். அஷ்வினின் ஓவரில் மட்டும் ஆறு ரன்களோடு அடக்கமாக இருந்தவர்கள், இறுதி மூன்று ஓவர்களிலும் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு பவுண்டரி லைனுக்கு வெளியே விசா கொடுத்தார்கள். அதில் 9 பெரிய ஷாட்டுகளோடு 47 ரன்கள் வந்து ஸ்கோரை 192-க்கு எடுத்துச் சென்றுவிட்டது.

முதல் 10 ஓவரில் 72 ரன்கள் வந்திருக்க, இறுதி 10-ல் 120 ரன்களைக் குவித்துக் கலங்கடித்தது குஜராத். உபயம்: பாண்டியா, மனோகர், மில்லர் மூவரணி. இந்த இடம்தான் ராஜஸ்தான் சறுக்கிய இடம்.

RR vs GT

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டியா, 52 பந்துகளில் 87 ரன்களைச் சேர்த்து, கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார். பழைய பாண்டியாவாக அவர் திரும்பியிருப்பதே, குஜராத்தின் பலத்தைப் பன்மடங்காக்குகிறது.

கடின இலக்கெனினும் சிக்ஸ் ஹிட்டர்களின் பாசறையான ராஜஸ்தானுக்கு இந்த இலக்கு சோளப்பொறிதான். ஆனாலும் ‘குஜராத்தின் வலுவான பௌலிங்கை அது சமாளிக்குமா?’ என வாதங்களுடனும் சமாதானங்களுடனும் சேஸிங் தொடங்கியது.

ஷமி வீசிய முதல் பந்தே லெக்சைடில் நகர்ந்து வேடிடம் கேட்ச் ஆக, தயங்காமல் ரிவ்யூவுக்குச் சென்றது குஜராத். ஆனால், நல்வாய்ப்பாக பட்லர் தப்பிப் பிழைக்க, ஏறிய பதற்றத்தை அவர் ஹாட்ரிக் பவுண்டரிகளோடு தணித்துக் கொண்டார். அடுத்து வந்த புதுமுகவீரர் யாஷையும் அவர் நையப் புடைத்து, நான்கு பந்துகளில் 14 ரன்கள் விளாசினார். முதலிரு ஓவர்களில் ஃபுல் லெந்த்தில் வந்த ஸ்ட்ரைட் டெலிவரிகள் ரன்களை வாரித்தந்தன. பதிலடியாக, படிக்கல் சந்தித்த முதல் பந்திலேயே அவரை டக்அவுட் ஆக்கி தனது முதல் விக்கெட்டை எடுத்தார் யாஷ்.

“சர்ப்ரைஸ்” என ராஜஸ்தான் அஷ்வினை அனுப்பியது. பட்லரும், அஷ்வினும் ஓரணியில் விளையாடுவதே விந்தையானதாக தொடக்கத்தில் இருந்ததென்றால், இருவரும் பவர்பிளேயில் கரம் கோத்தது வித்தியாசமாக இருந்தது. ரஷித்தின் பவர்பிளே எக்கானமி, மத்திய ஓவர்களைவிட அதிகமென்றாலும் பட்லருக்காகவே அவரைச் சிறப்பாக ஐந்தாவது ஓவரில் வரவைத்தார் பாண்டியா. ஆனால், ஃபுல் லெந்த்தில் ஸ்லாட்டில் விழுந்த அவரது பந்தை லாங் ஆனுக்கு அனுப்பினார் அஷ்வின். எல்லாமே சரியாகச் சென்று கொண்டிருந்தது ராஜஸ்தானுக்கு.

RR vs GT

ஆனால், வீழ்ச்சியின் ஆதியாக அமைந்தது பவர்பிளேயின் கடைசி ஓவர். அஷ்வின், ஃபெர்கூசன் வீசிய முதல் பந்தை கவர் பக்கம் காற்று வாங்க அனுப்ப, அதை அபாரமாக மில்லர் கேட்ச் பிடித்தார். பரிசோதனை பார்ட்னர்ஷிப் மூன்று ஓவர்கள் மட்டுமே நீடிக்க, அதனினும் பேரதிர்ச்சி அதே ஓவரின் இறுதிப்பந்திலேயே காத்திருந்தது. முந்தைய பந்தில் சிக்ஸரோடு அரைசதத்தை, அதுவும் 23 பந்துகளில் கடந்து அபாயகரமான புயலாக மாறத் தொடங்கியிருந்த பட்லரை ஃபெர்கூசனின் லெக் கட்டர் யார்க்கராக வந்து வீழ்த்தியது. 10.83 என ரன்ரேட்டினால் அசராமல் இருந்தாலும் அடுத்தடுத்த இரண்டு விக்கெட்டுகள் ராஜஸ்தானை நிலைகுலையச் செய்தன. அதிலும் பட்லரின் விக்கெட், குஜராத்தினை பல அடிகள் முன்னால் நகர்த்தியது.

‘சாம்சனே சரணம்’ என அவரது சிக்ஸ் ஹிட்டிங் திறனின் மீது நம்பிக்கையைக் குவித்தாலும் ஃபெர்கூசனை வைத்து அவருக்குக் குறிவைத்தது குஜராத். ஆனால், பாண்டியாவின் அபார டெரக்ட் ஹிட்டால் சாம்சனின் விதி வேறு வடிவில் வேலை செய்தது. ஃபெர்கூசன் வீசிய பந்தை மிட் ஆஃபில் அடித்துவிட்டு சாம்சன் ஓட, பாண்டியா பந்தைக் கைப்பற்றி, கணநேரத்தில் ஸ்டம்பை தகர்த்து சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார். “சிக்ஸ் அடிக்கும் திறனிருக்க, ரிஸ்க் எடுத்து சிங்கிள் எதற்கு?!” என சாம்சன் சற்றே சிந்தித்திருந்தால்கூட அவரது விக்கெட் பிழைத்திருக்கும்.

RR vs GT

21 பந்துகளுக்குள் விழுந்த இந்த மூன்று விக்கெட்டுகள்தான், ராஜஸ்தானின் கோட்டையைத் தகர்த்தன. கூடவே ரன்ரேட்டும் சரியத் தொடங்கியது.

ஹெட்மையர் – வான் டர் டஸன் கூட்டணியின் ஆயுளும் சரியாக மூன்று ஓவர்கள்தான். யாஷ், கேஜிஎஃப் மோடில் டஸனை வெளியேற்ற, மொத்தமாக ராஜஸ்தான் மூழ்கத் தொடங்கியது. இறுதி 9 ஓவர்களில் 99 ரன்கள் என ஓவருக்கு 11 ரன்களை வெற்றி தேவதை கேட்டார். ஷமி, ரஷித், ஃபெர்கூசன் ஆகியோருக்கு தலா மூன்று ஓவர்களும், கூடவே பாண்டியாவும் இருக்கிறார் என்பதுவுமே, ராஜஸ்தானுக்கான அடுத்தடுத்த ஓவர்களின் கடினத்தன்மைக்குக் கட்டியம் காட்டியது.

RR vs GT

ஹெட்மெயரின் விக்கெட்டோடு எல்லாம் முடிந்து விடும் என்பதால், ஷமியை பாண்டியா உடனே கொண்டுவர, சிக்ஸர், பவுண்டரி என வெறித்தனமாக அடித்து ரன்ரேட்டைக் கூட்ட முயன்றாலும் அந்த ஓவரின் முடிவிற்குள் அவரது ஆட்டமும் முடிந்தது.

மீதமுள்ள ஓவர்களில், அடாவடியாக ரன்சேர்க்க ஆள் இல்லை என்பதே அந்தத் தருணத்தில் குஜராத்திற்கான வெற்றியை ஊர்ஜிதப்படுத்தியது. குஜராத்தின் அதிபலம் வாய்ந்த பௌலிங் படை மீதக் காரியத்தை சரியாக கவனித்துக் கொண்டது. அடுத்த 5 ஓவர்களைக் கட்டுப்பாடாக வீசி, 32 ரன்களை மட்டுமே கொடுத்ததோடு, பராக் மற்றும் நீசமின் விக்கெட்டையும் வீழ்த்திவிட்டனர். எனவே இறுதி இரண்டு ஓவர்களில் 44 ரன்கள் தேவை என்பது இயலாததாகி சம்பிரதாயத்திற்காக வீசப்படுவதாக மாறிவிட்டது. நீசமின் விக்கெட்டை பாண்டியா எடுத்து பந்து வீச்சிலும் பங்காற்றியிருந்தார். இறுதி ஓவரில் யாஷின் கணக்கில் இன்னொரு விக்கெட் ஏறி அவரின் அறிமுகப் போட்டியையே நினைவுகூரத் தக்கதாக மாற்றியது.

இறுதியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி, முதலிடத்திற்கு கம்பீரமாக முன்னேறியது. முப்பரிமாணமல்ல, கேப்டன் என்பதையும் சேர்த்து நான்கு பரிமாணத்திலும் பாண்டியா ஸ்கோர் செய்கிறார்.

RR vs GT

மறுபக்கமோ, ராஜஸ்தானின் பௌலிங் படை பலமானதாகக் கருதப்பட்டாலும் போல்ட் இல்லாதது இப்போட்டியில் அவர்களது பலத்தை பன்மடங்காகக் குறைத்தது. அது மட்டுமில்லாமல், இலக்கை நிர்ணயித்தே தொடர் முழுவதும் பழகியவர்களால் அதனைத் துரத்துகையில் அந்த அழுத்தத்தைச் சமாளிக்க முடியாததும் அதனால் விக்கெட்டுகள் சரிந்ததும் பாதகமாகி போனது.

‘லீக் சுற்றில் இரண்டாவது தோல்விதானே?!’ என இதனைக் கடந்து விடாமல், குறைகளைக் களைய ராஜஸ்தான் முற்பட்டால்தான் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வசப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.