அமெரிக்காவிலும் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி

புதுடெல்லி: அமெரிக்காவிலும் மனிதஉரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை வாஷிங்டனில் சந்தித்து பேசிய பிறகு இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிப்பதாக அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்துவருவது குறித்தும், ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 ரக ஏவுகணைகளை வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அரசு அவ்வப்போது கூறி வருகிறது.

இந்த சூழலில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று முன்தினம் கூறியதாவது:

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பின்போது மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அரசியல், ராணுவ ரீதியாக மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்டது.

நம்மை (இந்தியாவை) குறித்து வெவ்வேறு கருத்துகள் இருப்பது இயல்பானது. அதேநேரம் நமக்கும் கருத்துகளை கூற உரிமை உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறித்து நாமும் கருத்துகளை தெரிவிக்க முடியும். அமெரிக்காவிலும் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன. அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உதாரணமாக கூற முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதேபோல அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்தியர்களை குறி வைத்து இனவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அமெரிக்காவிலும் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெய்சங்கரின் துணிச்சலான பேச்சு சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.